திருவள்ளூரில் ரூ.44.31 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட உழவர்சந்தை: அமைச்சர் ஆர்.காந்தி திறந்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் உழவர் சந்தை கடந்த 2000ம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்காலத்தில் 40 கடைகளுடன் தொடங்கப்பட்டது. இங்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் ரூ.44.31 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு கழிவறை, குடிநீர் வசதி மேம்படுத்தப்பட்டு 22 புனரமைக்கப்பட்ட கடைகளுடன் 6 புதிய கடைகள் மற்றும் தினசரி விலையினை நுகர்வோர் அறியும் வகையில் காணொளி விலை விளம்பர பலகை ஆகிய பொதுமக்களின் நேரடி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதன் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. கே.ஜெயக்குமார் எம்பி, எம்எல்ஏ க்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) ராஜேஸ்வரி, வேளாண்மை அலுவலர் முபாரக், உதவி வேளாண்மை அலுவலர் இலக்கிய பாரதி ஆகியோர் வரவேற்று பேசினர்.

விழாவில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு புனரமைக்கப்பட்ட திருவள்ளூர் உழவர் சந்தையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார். பின்னர் அமைச்சர் பேசியதாவது; பொதுமக்களுக்கு பசுமையான காய்கறி, கீரை பழ வகைகள் விவசாயிகளின் பண்ணையில் இருந்து நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்யப்பட உள்ளது. காலை, மாலை நேரங்களில் காய்கறி, கனி, பூக்கள் மட்டுமின்றி வீட்டுக்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டு பொருட்களுடன் செயல்பட உள்ளது. உழவர் சந்தையால் உழவர்களுக்கு அடையாள அட்டையுடன் அனுமதி இலவசம். வாடகை இல்லாத கடை மற்றும் தராசு வசதி. அது மட்டுமல்லாமல் உழவர்களிடம் பொதுமக்கள் நேரடியாக வியாபாரம் செய்யும் வாய்ப்பு. சரியான எடை, சரியான விலை கொடுத்து பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம். கூட்டுறவு துறை மூலமாக பல்பொருள் கூட்டுறவு சிறப்பங்காடி, மகளிர் சுய உதவி குழு மூலமாக சிற்றுண்டி ஆகியவையும் விற்பனை செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

The post திருவள்ளூரில் ரூ.44.31 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட உழவர்சந்தை: அமைச்சர் ஆர்.காந்தி திறந்தார் appeared first on Dinakaran.

Related Stories: