புதுடெல்லி: நாட்டின் வெப்ப அலை நிலவரத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி, தீ விபத்தால் பல உயிர்கள் பலியாகி உள்ள நிலையில், மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் வழக்கமான தீ தடுப்பு மற்றும் மின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரியில் 3 தியானத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடி நேற்று பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றார். வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கடும் வெப்ப அலை நிலவி வருகிறது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசத்தில் வெப்ப நிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருப்பதையும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என்பதையும் மோடியிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல, கடந்த சில நாட்களாக டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பயங்கர தீ விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் பலியான விவகாரம் குறித்தும் அதிகாரிகளுடன் மோடி ஆலோசித்தார். அப்போது, மருத்துவமனைகள், பிற பொது இடங்களில் வழக்கமாக தீயணைப்பு ஒத்திகைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்திய மோடி, தீ தடுப்பு மற்றும் மின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக ஆய்வு செய்து அவற்றை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
மேலும், காட்டுத்தீயை கட்டுப்படுவதற்கான வழக்கமான பயிற்சிகளையும் திட்டமிட அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். சமீபத்திய ரெமல் புயலுக்குப் பிந்தைய நிலையை ஆய்வு செய்யும் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, அசாம், மிசோரமில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிர் சேதம், வீடுகள் சேதம் குறித்து கேட்டறிந்தார். புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தொடர்ந்து முழு ஆதரவை வழங்கும் என அவர் தெரிவித்தார். வரும் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகளையும் ஆய்வு செய்யும் கூட்டத்திற்கும் பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
மேலும் தேர்தல் முடிவுக்குப் பின் புதிய அரசு அமைந்ததும் முதல் 100 நாளில் செய்ய வேண்டிய பணிகளுக்கு தயார் நிலையை ஆய்வு செய்யும் கூட்டத்திலும் மோடி பங்கேற்று ஆலோசனை வழங்கினார்.
The post மருத்துவமனை, பொது இடங்களில் தீ தடுப்பு, மின் பாதுகாப்பு இருப்பதை உறுதிப்படுத்துங்கள்: பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.