மக்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம் தந்து அதிகாரிகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்: திருவிக நகர் மண்டல குழு தலைவர் அறிவுரை

பெரம்பூர்: மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அனைத்து அதிகாரிகளும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என திருவிக நகர் மண்டல குழு கூட்டத்தில் தலைவர் சரிதா மகேஷ்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் மண்டல குழு கூட்டம், பட்டாளம் ஸ்டாரன்ஸ் சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடந்தது. மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார் தலைமை வகித்தார். இதில், மண்டல அதிகாரி முருகன், செயற்பொறியாளர்கள் செந்தில்நாதன், சரவணன், மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம்கவி பங்கேற்றார்.

கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:
64வது மாமன்ற உறுப்பினர் நாகராஜன்: அக்பர் ஸ்கொயர், தசரதபுரம் மெயின் ரோடு, தில்லை நகர் மெயின் ரோடு உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். 72வது மாமன்ற உறுப்பினர் சரவணன்: மழைநீர் வடிகால் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் இன்னும் நடைபெறாமல் உள்ளது. அதை உடனடியாக துரிதப்படுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும். ஓட்டேரி பகுதியில் உள்ள கெனால்களை தூர்வார வேண்டும். ஆட்டிறைச்சி கூடத்தை நவீனப்படுத்த வேண்டும். 78வது மாமன்ற உறுப்பினர் வேலு: தானா தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மகளிர் உடற்பயிற்சி கூடத்தை மேம்படுத்த வேண்டும்.

66வது வார்டு உறுப்பினர் யோக பிரியா: சக்தி நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பூங்காக்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும். மழைநீர் வடிகால் பள்ளங்களில் உள்ள குப்பையை அகற்ற வேண்டும். மாமன்ற உறுப்பினர் தாவூத் பி: விட்டுப் போன இடங்களில் மழைநீர் கால்வாய் பணிகளை அமைக்க வேண்டும். திருவிக நகர் மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள குப்பை கழிவுகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 70வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீதனி: அயனாவரம் பகுதியில் மின்வாரிய ஊழியர்கள் தங்களது பணியில் சுணக்கம் காட்டுவதால் பல இடங்களில் மின் வாரியத்திற்கு சொந்தமான பகுதிகளில் கேபிள்கள் அறுந்து கிடப்பதால் மின் தடை ஏற்படுகிறது. மின்வாரிய ஊழியர்கள் இதை சரி செய்து தர வேண்டும். மேலும் பழைய குடிநீர் குழாய்கள் மற்றும் பைப்புகளை மாற்றித் வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எம்எல்ஏ தாயகம்கவி பேசுகையில், ‘அதிகாரிகள் பொறுப்பை தட்டிக் கழிக்கும் வேலையில் ஈடுபடக்கூடாது. அனைத்து அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து வேலை செய்தால்தான் பணிகளை துரிதமாக முடிக்க முடியும். மண்டல குழு கூட்டத்திற்கு அனைவரும் கண்டிப்பாக வரவேண்டும். தாசில்தார் அலுவலகத்தில் இருந்து பெரிய அளவில் ஆட்கள் வருவதில்லை. அவர்கள் வந்தால்தான் அனைத்து குறைகளும் சரி செய்யப்படும்’ என்றார்.

மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார் பேசுகையில், ‘‘சில அதிகாரிகள் மண்டல குழு கூட்டத்திற்கு வருவதில்லை. தாமதமாக வருகிறார்கள். நேரத்தை அவர்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். மக்கள் பிரச்னைகளுக்காக ஒன்று கூடுகிறோம். எனவே மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தந்து, அனைத்து அதிகாரிகளும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்’ என்றார். இந்த கூட்டத்தில் மொத்தம் 142 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மக்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம் தந்து அதிகாரிகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்: திருவிக நகர் மண்டல குழு தலைவர் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: