பெண்ணிடம் ரூ.2.65 லட்சம் மோசடி பாஜ மாவட்ட செயலாளர் கைது

முத்துப்பேட்டை: திருவாரூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.2.65 லட்சம் மோசடி செய்த பாஜ மாவட்ட செயலாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை, மேலக்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன்(56). பாஜ மாவட்ட செயலாளராக உள்ள இவர், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம், காலனிதெருவை சேர்ந்த அப்பாதுரை மனைவி சாந்தி (50) என்பவரிடம் அவரது மகன் ராம்குமாருக்கு, கிராம உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2021ம் ஆண்டு பல தவணைகளாக ரூ.2,65,000 பணம் பெற்றுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும் வேலை வாங்கி தராமலும், வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் ராஜேந்திரன் ஏமாற்றி வந்தார். இதுதொடர்பாக சாந்தி, நேற்றுமுன்தினம் திருவாரூர் மாவட்ட எஸ்பி ஜெயகுமாரை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.எஸ்பி உத்தரவின்பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து ராஜேந்திரனை தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில், முத்துப்பேட்டை இடும்பாவனம், சிவன்கோவில் பகுதியை சேர்ந்த ஆனந்தவள்ளி என்பவரிடமும் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post பெண்ணிடம் ரூ.2.65 லட்சம் மோசடி பாஜ மாவட்ட செயலாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: