தகுதியானவர்களின் விவரத்தை சேகரித்து அடுத்தாண்டு பொங்கல் பரிசு தொகை வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை: அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: அடுத்தாண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகையை வங்கி கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ‘தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசுத்தொகையாக வழங்கப்படும் ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தவும், பொங்கல் பரிசுத் தொகுப்பிலுள்ள சர்க்கரைக்கு பதிலாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வெல்லம் வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’ என்று தஞ்சை மாவட்டம், சுவாமிமலையைச் சேர்ந்த சுந்தரவிமலநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், அரசு பிளீடர் பி.திலக்குமார் ஆகியோர் ஆஜராகி, ‘‘பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன் வழங்கும் பணி 60 சதவீதம் முடிந்துள்ளது. மீதி 40 சதவீதம் மட்டுமே உள்ளது. அதுவும் ஓரிரு நாட்களில் முடிந்து விடும். பணத்தை வங்கி கணக்கில் தான் செலுத்த வேண்டுமென இதுவரை எந்த கோரிக்கையும் வரப்பெறவில்லை. டோக்கன் வழங்குவது தொடர்பாக எந்த புகாரும் இல்லை. 2.25 ேகாடி பேருக்கும் குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கி கணக்கில் பணம் செலுத்துவதில் நடைமுறை சிரமம் உள்ளது. ஏழைகள் அனைவரும் வங்கி கணக்கு வைத்திருக்க வாய்ப்பில்லை. அதே நேரம், குறைந்தபட்ச தொகை வங்கி கணக்கில் இல்லாத நிலையில், பணத்தை செலுத்தும்போது பிடித்தம் செய்ய வாய்ப்புள்ளது. இதனால், பொங்கல் பரிசு வழங்குவதன் நோக்கம் பாதிக்கும். கடந்த முறை வெல்லம் வழங்கியபோது புகார்கள் எழுந்தன. அதனால், வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரை வழங்க முடிவு செய்யப்பட்டது’’ என்றனர்.

அப்போது நீதிபதிகள், ‘‘மகளிர் உரிமைத் தொகையைப் போல இதையும் வங்கியில் செலுத்தலாமே’’ என்றனர். பின்னர் நீதிபதிகள், ‘மனுதாரர் தனது கோரிக்கை குறித்து கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளார். எனவே, மனுதாரர் கோரிக்கை குறித்து அரசு தரப்பில் ஜன.11க்குள் பரிசீலிக்க வேண்டும். அப்படி பரிசீலிக்க வாய்ப்பில்லை என கருதினால், பொதுநலன் கருதி அடுத்தாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிக்காக வங்கி கணக்கு வைத்துள்ள தகுதியானவர்களின் விபரத்தை சேகரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளனர்.

The post தகுதியானவர்களின் விவரத்தை சேகரித்து அடுத்தாண்டு பொங்கல் பரிசு தொகை வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை: அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: