விபத்தில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ரூ.4 கோடியே 95 லட்சம் வழங்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான நிதி வழங்கும் திட்டத்தில் நடப்புக் கல்வியாண்டில் 665 வைப்பு நிதி பத்திரங்களுக்கு ரூ.4 கோடியே 95 லட்சம் பெறப்பட்டுள்ளது. இதனை உரிய மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்கக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படும் மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் அனுமதி அளித்து அந்த நிதி, அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத்தொகையாக செலுத்தப்படுகிறது. அதில் இருந்து கிடைக்கும் வட்டித்தொகை மற்றும் அதன் முதிர்வுத்தொகை மாணவ-மாணவிகளின் கல்வி செலவுக்காகவும், பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்பட்டது.

பின்னர் இந்த தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் மேற்கண்ட நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடப்பு கல்வியாண்டில் (2023-2024) வைப்புத் தொகைக்கான பத்திரங்கள் ரூ.50 ஆயிரத்துக்கு 15 பத்திரங்கள், ரூ.75 ஆயிரத்துக்கு 650 பத்திரங்கள் என மொத்தம் 665 வைப்பு நிதி பத்திரங்கள் ரூ.4 கோடியே 95 லட்சம் தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிதி நிறுவனத்திடம் இருந்து தொடக்கக் கல்வி இயக்ககம் பெற்றுள்ளது.

இதனை சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கு புத்தகத்துடன் ஒத்திசைவு செய்து, அவர்களிடம் வழங்கி மாணவர்கள் மற்றும் பாதுகாவலரின் ஒப்புகையை பெற வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

The post விபத்தில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ரூ.4 கோடியே 95 லட்சம் வழங்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: