தமிழகத்தில் முதன்முறையாக தென்காசியில் நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையம்: முதல் நாளில் 20 நாய்களுக்கு கருத்தடை

தென்காசி: தென்காசி நகராட்சி பகுதியில் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இரவு மற்றும் அதிகாலை வேலைகளை தனியாக நடப்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும், நடை பயிற்சி மேற்கொள்ளுபவர்களுக்கும் அவை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்நிலையில் நாய்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் கட்டுப்படுத்தும் விதமாக அவற்றுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறை மாற்று யோசனையாக முன் வைக்கப்பட்டது. இதனை இந்திய பிராணிகள் நல வாரியம் ப்ளூ கிராஸ் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.

இதன்படி தென்காசி நகராட்சியில் ஏசி வசதியுடன் கூடிய ஆபரேஷன் தியேட்டர், மருத்துவர் அறை, உணவு சமைக்கும் சமையலறை, நோய் உள்ள நாய்களுக்கு தனி அறை உள்ளிட்ட வசதிகளுடன் நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையம் கட்டப்பட்டுள்ளது. இது நேற்று முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நகர்மன்ற தலைவர் சாதிர் துவக்கி வைத்தார். ஆணையர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், ஆய்வாளர் ஈஸ்வரன் பங்கேற்றனர். முதல் நாளில் 20 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் தென்காசி நகராட்சியில் தான் முதன்முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் மாநகராட்சிகளை பொருத்தவரை மூன்று ஆண்டுகளாக திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மூன்று மாநகராட்சிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த நடவடிக்கை
பொதுவாக நாய்கள் 3 முதல் 13 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என்று கூறப்படுகிறது. இவற்றில் 3 மாதத்தில் கருத்தரித்து ஒரே சமயத்தில் 6 மற்றும் அதிகபட்சமாக 10 குட்டிகள் வரை பிறக்கிறது. இதுவே நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகிறது. குட்டிகளை ஈன்ற ஒரு வருடத்திற்குள்ளேயே அடுத்த கருத்தரித்தலுக்கு தயாராகிவிடும். தற்போது மேற்கொள்ளப்படும் கருத்தடை நடவடிக்கையின் மூலம் மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் நாய்களின் எண்ணிக்கை பெருகுவது குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்த முடியும்.‌ அதாவது இந்த திட்டத்திற்கான பலனை அதிகபட்சம் ஆறு மாதத்திற்குள் கண்கூடாக அறியலாம்.

நாய்கள் கணக்கெடுப்பு
தென்காசி நகராட்சியில் 1500 நாய்கள் வரை சுற்றித் திரிவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவை வார்டு, வாரியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வார்டாக நாய்கள் நவீன அறுவை சிகிச்சை அரங்கிற்கு கொண்டு வரப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 20 நாய்கள் வீதம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆறு மாதம் வரை இந்த அறுவை சிகிச்சை தொடர்ந்து நடைபெறும்.

கருத்தடை செய்ய 4 மருத்துவர்கள் குழு நியமனம்
தென்காசியில் நாய்களுக்கு கருத்தடை செய்வதற்காக இந்திய பிராணிகள் நல வாரியத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட 4 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவற்றை கண்காணிக்க இரண்டு அரசு மருத்துவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். நாய்களைப் பிடித்து வர 5 பயிற்சி பெற்ற பணியாளர்களும், இது தவிர நகராட்சியின் தூய்மை பணியாளர்கள், சுகாதார மேஸ்திரி, சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.

வெறிநாயாக மாறுவதை தடுக்க தடுப்பூசி
நாய்களுக்கு கருத்தடை செய்யும் பொழுது மேலும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக வெறி நாயாக மாறுவதை தடுக்கும் வகையில் தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது. கணினியில் நாய்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன் நம்பரை உள்ளீடு செய்தாலே அந்த நாயின் அனைத்து விவரங்களும் வந்துவிடும் கருத்தடையின் பொழுது ஒவ்வொரு நாயும் புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுக்கப்படுகிறது.

நோய்களை அறிய கண்காணிப்பு
நாய்களை பிடிப்பதற்கு கம்பி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே வலைகளை கொண்டு நாய்களை பிடித்து பாதுகாப்பாக கருத்தடை மையத்திற்கு கொண்டு வர சிறப்பு வாகனம், கருத்தடை மையத்தில் நாய்கள் தங்குவதற்கான அறை, குளிர்சாதன வசதியுடன் கூடிய ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. பிடித்து வரப்படும் நாய்கள் ஒரு வாரத்திற்கு சாதாரண நோயாளிகளை போன்று அப்சர்வேஷனில் வைக்கப்படுகிறது. பல்வேறு ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு வாரமும் பால், பிரட் உணவுகள் வழங்கப்படுகிறது. அவற்றின் காதில் அடையாளம் இட்டு டோக்கன் நம்பர் போடப்படுகிறது. இந்த எண்ணை வைத்து அந்த நாய்க்கு என்னென்ன நோய்கள் உள்ளது, என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விவரங்களை அதற்கான கோப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம். கருத்தடை செய்யப்பட்டு அதில் ஏற்படும் புண்கள் குணமான பிறகு தான் கருத்தடை மையத்திலிருந்து மீண்டும் பாதுகாப்பாக பிடித்த இடத்திலேயே கொண்டு விடப்படும்.

The post தமிழகத்தில் முதன்முறையாக தென்காசியில் நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையம்: முதல் நாளில் 20 நாய்களுக்கு கருத்தடை appeared first on Dinakaran.

Related Stories: