திமுக முப்பெரும் விழா ஏஐ தொழில்நுட்ப வசதியுடன் பிரமாண்ட மாநாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: திமுகவின் 75வது ஆண்டு பவள விழா, முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எ.சி.ஏ மைதானத்தில் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் பணிகளை திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மா. சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆண்டுதோறும் முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது. பெரியார், அண்ணா பிறந்தநாள், திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும், இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக திமுக பவள விழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இந்த ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 2017 ஆம் ஆண்டு முரசொலி பவளவிழா கொண்டாடப்பட்டது. மேலும் மகளிர் மாநாடு தேசிய அளவிலான மகளிர் தலைவர்கள் அடங்கிய மாநாடும் இங்கு நடைபெற்றது.

வரலாற்று சிறப்பு மிக்க மாநாடுகள் இங்கு நடைபெற்றுள்ள நிலையில், முப்பெரும் விழாவும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கு முன்பாக நடைபெற்ற மாநாடுகளை விட பிரமாண்டமாக இம்முறை மாநாடு நடத்தப்படும். இந்த மாநாட்டில் 65 ஆயிரம் இருக்கைகள், 1 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பவள விழாவையொட்டி 75 அடி உயர திமுக கொடி பறக்க உள்ளது. திமுக சாதனைகள் குறித்த கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மாநாட்டிற்கு வருபவர்களுக்கு வாகன நிறுத்தம் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏஐ (AI) தொழில் நுட்ப வசதியும் இந்த மாநாட்டில் பயன்படுத்தப்பட உள்ளது. 2026ல் 200க்கு மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெரும் என்று முதல்வர் கூறி அதற்காக செயல்பட்டு வருகிறார். அதற்கு இந்த மாநாடு அடித்தளமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post திமுக முப்பெரும் விழா ஏஐ தொழில்நுட்ப வசதியுடன் பிரமாண்ட மாநாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: