திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம்

*153 தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பி வைப்பு; கலெக்டர் கிறிஸ்துராஜ் தகவல்

திருப்பூர் : திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தில் 153 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மாநில சுகாதார பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்து விதமான மருத்துவ சேவைகளும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் சுகாதாரப் பேரவை 2-ம் கட்டக் நடைபெறுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் 1 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 1 மாவட்ட அரசு மருத்துவமனை, 8 அரசு மருத்துவமனைகள், 67 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 14 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 21 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 341 துணை சுகாதார நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், முதலமைச்சரால் மருத்துவத்துறையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவம் திட்டம், கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம், பள்ளி சிறார் கண்ணொலி காப்போம் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம், மகப்பேறு சத்துணவு பெட்டகம் வழங்கும் திட்டம், தாய்-சேய் நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம், சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம், குடல்புழு நீக்கம் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் சுகாதாரப் பேரவை முதல் கூட்டம் கடந்த 22.12.2022-ல் நடைபெற்றது. மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெறுவதற்கு முன் வட்டார அளவில் சுகாதார பேரவை நடத்தப்பட்டு, வட்டார அளவிலான தேவைகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆலோசனைக்கேற்ப தொகுத்து மாவட்ட சுகாதார பேரவையில் விவாதிக்கப்பட்டு மாநில அளவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதல் சுகாதார பேரவை கூட்டத்தில் 122 கோரிக்கைகள் மாவட்ட மற்றும் வட்ட அளவில் தீர்க்கப்பட வேண்டியவையாகும். இதில் பெரும்பாலும் கட்டமைப்பு தொடர்பான கோரிக்கைகள். இதில் சில மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் கோரப்பட்டுள்ளன. 224 கோரிக்கைகள் மாநில அளவில் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

224 கோரிக்கைகளில் அதிகபடியாக கட்டுமானங்கள் தொடர்பானவை. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.5.00 கோடியாகும். இதில் 75 சதவீத பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மாவட்ட சுகாதார பேரவையின் 2-ம் கூட்டத்தில் தமிழ்நாடு சுகாதார திட்டம் தொடர்பாகவும், பொதுசுகாதார கட்டமைப்பு வசதிகள் குறித்தும், செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இப்பேரவையில் மருத்துவத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும், அனைத்துத் துறை அலுவலர்களும், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களும், மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதனை ஒருங்கிணைப்புக்குழு பரிசீலித்து எடுக்கப்பட்ட 153 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாநில சுகாதார பேரவைக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் அடிப்படையில் மாநில அளவில் முதலிடம் பெற்ற பூமலூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற வெள்ளகோவில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், கணியூர் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம், நெருப்பெரிச்சல் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை சமந்தப்பட்ட மருத்துவ அலுவலர்களிடம் கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

கூட்டத்தில், துணை மேயர் பாலசுப்பிரமணியம், உதவி ஆட்சியர் (பயிற்சி) கிர்த்திகா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், இணை இயக்குநர் மருத்துவ பணிகள்) கனகராணி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) ஜெகதீஸ்குமார். மாநகர நல அலுவலர் கௌரி சரவணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மருத்துவர்கள் உள்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: