பலத்த காற்று வீசியதன் காரணமாக வைகை அணையில் மீன்கள் பிடிப்பதில் சிரமம்

*3 மணி நேரம் காத்திருந்து ஏமாற்றம்

ஆண்டிபட்டி : தேனி மாவட்டத்தில் பலத்த காற்று வீசுவதால் வைகை அணையில் மீன் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் மீன்கள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.தென்மேற்கு பருவமழை காரணமாக, ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 60 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. வைகை அணை நீர்தேக்கத்தில் தனியார் நிர்வாகம் மூலம் மீன்பிடி தொழில் நடைபெறுகிறது.

இங்கு பிடிபடும் ஜிலேபி ரக மீன்களை மக்கள் விரும்பி வாங்கி செல்வார்கள். வழக்கமாக வைகை அணையில் தினமும் ஒரு டன் அளவில் மீன்கள் பிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். ஆனால் கடந்த சில வாரங்களாகவே தேனி மாவட்டத்தில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக மீனவர்கள் மீன் பிடிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் பலத்த காற்று காரணமாக வலையில் மீன்கள் அதிகம் பிடிபடவில்லை.

இதனால் ஒரு நாளைக்கு ஒரு டன் அளவில் கிடைத்த மீன் தற்போது 200 கிலோ முதல் 300 கிலோ மீன்களே பிடிபடுகிறது.நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வைகை அணைக்கு மீன்கள் வாங்க ஒரு நாளைக்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். டோக்கன் அடிப்படையில் முதலில் வந்த சுமார் 50 பேருக்கும் மட்டுமே மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.

இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மீன் வாங்க வந்த பொதுமக்களில் பெரும்பாலானோர் மீன்கள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தேனி மாவட்டத்தில் வீசி வரும் பலத்த காற்றின் காரணமாக மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்களும் வருவாய் இன்றி தவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

The post பலத்த காற்று வீசியதன் காரணமாக வைகை அணையில் மீன்கள் பிடிப்பதில் சிரமம் appeared first on Dinakaran.

Related Stories: