ஜனநாயகத்தை காப்பாற்ற ஒற்றுமையாக செயல்பட்டு சர்வாதிகார பாஜக அரசை தூக்கி எறிவோம்: காரிய கமிட்டி கூட்டத்தில் காங். தலைவர் கார்கே உரை

ஐதராபாத்: ஜனநாயகத்தை காப்பாற்ற ஒற்றுமையாக செயல்பட்டு சர்வதிகார பாஜக அரசை தூக்கி எறிய வேண்டும் என்று ஐதராபாத் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே பேசினார். காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நேற்று தெலங்கானா மாநிலம் ஐதரபாத்தில் தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காரிய கமிட்டி உறுப்பினர்கள் மத்தியில் பேசுகையில்:
வரவிருக்கும் மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவை தேர்தல்களில் அவரவர் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, எதிரிகளை முழு பலத்துடன் எதிர்கொள்ள வேண்டும். லோக்சபா தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். மாற்று அரசை அமைக்க விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும். இமாச்சல பிரதேசம், கர்நாடகா தேர்தல்களில் வெற்றி பெற்றது போன்று, மற்ற மாநிலங்களிலும் வெற்றி பெறவேண்டும். கட்சித் தலைவர்கள் சுயகட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.

கட்சிக்கு எதிரான கருத்துகளை ஊடகங்கள் மூலம் தெரிவிக்க கூடாது. இந்திய ஜனநாயகத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை உள்ளது. இன்றைய நிலையில் நாம் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இதுவல்ல. மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை பார்த்து நாம் ஊமையாக இருக்க முடியாது.

ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியுள்ளதால், இந்த சர்வாதிகார அரசை தூக்கி எறிய வேண்டும். காங்கிரஸ் தலைவராக மகாத்மா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டு நூற்றாண்டு (2024) வரப்போகிறது. அந்த காலகட்டத்தில் பாஜக அரசை அகற்ற வேண்டும். அதுவே மகாத்மாவுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும். தெலங்கானா மட்டுமின்றி, வரவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் நாம் வெற்றி பெறுவோம்’ என்றார்.

The post ஜனநாயகத்தை காப்பாற்ற ஒற்றுமையாக செயல்பட்டு சர்வாதிகார பாஜக அரசை தூக்கி எறிவோம்: காரிய கமிட்டி கூட்டத்தில் காங். தலைவர் கார்கே உரை appeared first on Dinakaran.

Related Stories: