பழுதடைந்து காணப்படும் குடிநீர் தொட்டி: அகற்ற கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் தூண்கள் விரிசல் ஏற்பட்டு பழுதடைந்து காணப்படும் குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு 30 வருடங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்துதான் தற்போதுவரை அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொட்டியின் சிமென்ட் சிலாப்புகள் விரிசல் ஏற்பட்டு அதன் கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே பழைய குடிநீர் தொட்டியை அகற்றி விட்டு புதிதாக குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. பழைய குடிநீர் தொட்டியின் தூண்கள் விரிசல் ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரிகிறது. சேதமடைந்த அந்த குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பல முறை மனு கொடுத்துள்ளோம். மேலும் கிராம சபை கூட்டத்திலும் பழைய குடிநீர் தொட்டியை அகற்றி விட்டு புதிய தொட்டி கட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டியை கட்டித்தர வேண்டும் என கூறினர்.

The post பழுதடைந்து காணப்படும் குடிநீர் தொட்டி: அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: