திருநின்றவூர் ராமர் கோயில் ஏரியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மதகு சீரமைப்பு பணி: செயற்பொறியாளர் நேரில் ஆய்வு

திருவள்ளூர்: பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக, திருநின்றவூர் ராமர் கோயில் ஏரியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மதகு சீரமைக்கும் பணியை செயற்பொறியாளர் நேரில் சென்று ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பெரிய ஏரியானது வடகிழக்கு பருவ மழை காலங்களில் தனது முழு கொள்ளளவில் தண்ணீர் நிரம்பும் போது அதனைச் சுற்றி உள்ள பகுதிகளான பெரியார் நகர், முத்தமிழ் நகர், சுதேசி நகர், கன்னிகாரபுரம் மற்றும் இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து சுமார் 2 மாதங்கள், 3 மாதங்கள் வரை நீர் வடியாமல் அங்குள்ள பொதுமக்கள் கடந்த 30 வருடங்களாக சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வருடம் பெய்த மழையால் பெருத்த வெள்ளம் ஏற்பட்டது. அப்போது மதகு வழியாக ஏரியிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. இதை தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு தற்காலிகமாக மணல் மூட்டை போட்டு செப்பணிடப்பட்டது. ஆனால் ஏரியின் மிக முக்கிய மதகான ராமர் மதகு வழியாக வெள்ள உபரி நீரை வெளியேற்ற முடியாமலும், பாசனத்துக்கு தண்ணீர் தர முடியாமல் முற்றிலும் வீணானது. எனவே, இந்த பிரச்னையை சீர் செய்யும் விதமாக இந்த ஆண்டு ஏரிகள் பராமரிப்பு நிதியிலிருந்து திருநின்றவூர் ராமர் கோயில் ஏரியின் மதகை சீரமைக்க தமிழக அரசு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.

இதனையடுத்து பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக சீரமைப்பு பணிகளை முடிப்பதற்காக போர்க்கால அடிப்படையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இனி வரும் பொழுது வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிகபடியான நீரை ராமர் கோயில் மதகு வழியாக வெளியேற்றி கூவம் ஆற்றுக்கு நீர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திருநின்றவூர் மதகு சீரமைப்பு பணியினை நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருண்மொழி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது, உதவி செயற்பொறியாளர் பாபு, உதவி பொறியாளர் உஷா உள்பட பலர் உடனிருந்தனர்.

The post திருநின்றவூர் ராமர் கோயில் ஏரியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மதகு சீரமைப்பு பணி: செயற்பொறியாளர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: