அமலாக்கத்துறை வழக்கில் முக்கிய சாட்சியான வங்கி மேலாளரிடம் செந்தில்பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணை: அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஒரு ஆண்டுக்கு பிறகு கடந்த 8ம் தேதி செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சாட்சி விசாரணை தொடங்கியது. இந்நிலையில் சாட்சிகளின் விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு நடந்து வருகிறது. வழக்கில் சிட்டி யூனியன் வங்கியின் கரூர் கிளையின் தலைமை மேலாளராக பணியாற்றிய ஹரிஷ்குமார் கடந்த வாரம் சாட்சியம் அளித்தார்.

அவரிடம் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கவுதமன், குறுக்கு விசாரணை செய்தார். செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா, சகோதரர் அசோக் குமாரின் வங்கி கணக்குகள் தொடர்பான விவரங்களை சாட்சி கூண்டில் நின்றவாறு ஹரிஷ்குமார் பதிலளித்தார். வங்கியின் ஆவணங்கள், கவரிங் லெட்டர் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் செந்தில் பாலாஜி தரப்பில் குறுக்கு விசாரணையின் கேட்கப்பட்டது. குறுக்கு விசாரணை நேற்று நிறைவடையாததால் வழக்கை வரும் 28ம் தேதிக்கு நீதிபதி அல்லி தள்ளிவைத்தார். இதனிடையே, செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை வரும் 28ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

The post அமலாக்கத்துறை வழக்கில் முக்கிய சாட்சியான வங்கி மேலாளரிடம் செந்தில்பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணை: அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: