மதுரை: மதுரை தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் கோயிலில் சூரியக்கதிர் நேரடியாக கருவறையில் விழுந்து இறைவனை தரிசிக்கும் நிகழ்வு இன்று தொடங்கியது. இதையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இது குறித்து அர்ச்சகர் ஒருவர் கூறுகையில், ‘இந்திரனுக்கு சுவாமி சாபவிமோசனம் கொடுத்ததால் தஷ்யாயனம் என்று சொல்லக்கூடிய சூரியஒளி, வடபுறமாக இருந்து பாதங்களில் பட்டு மேல் எழுந்து, தெற்கு நோக்கி நகரும் நிகழ்வு இதுவாகும். செப்.19ம் தேதி முதல் செப்.30ம் தேதி வரை, காலை சுமார் 6.15 மணிக்கும், 6.50 மணிக்கு என 2 முறை இது நடைபெறும். மாலையில் இதனைக் காண முடியாது.
கோயிலின் அமைப்பால் ஒளியின் வீச்சு ஆண்டுக்கு சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பட்டு, இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும். 64 திருவிளையாடல் நிகழ்ச்சியில் இந்திரனுக்கே விமோஷனம் கொடுப்பதும் அதில் அடங்கும். முக்தீஸ்வரர் உயிர் நிலைக்கு மட்டும்தான் முக்தி அளிக்கிறார் என்று சொல்லக்கூடிய கருத்து தவறு அவர் எல்லாமுமாய் விளங்குகிறார். கஷ்டங்களுக்கும், தீராத நோய்களுக்கும், பசி, பட்டினி போன்று எல்லா நிலைக்கும் முக்தி வழங்குகிறார். இவரை தொழுவது காசியில் கிடைக்கும் புண்ணியத்திற்கு சமம். பல நவக்கிரக தோஷங்களை தனது நேரடி பார்வையில் மூலம் தீர்த்து வைக்கிறார்.
பால் அபிஷேகம், தேன் அபிஷேகங்களை விரும்புவார். தஷ்யாயனம் மற்றும் உத்திரயாயனம் காட்சிகளை தரிசிப்பவருக்கு கண் நோய்கள் மற்றும் மன நோய்களில் இருந்து முக்தி அளிக்கிறார் முக்தீஸ்வரர். மேலும் பிரதோஷ நாட்களில் கோயிலுக்கு வருபவர்களுக்கு உணவு வழங்கும்போது நாம் செய்த பாவங்களை மன்னிக்கிறார். தினமும் நாம் காலையில் செய்யக்கூடிய சூரிய நமஸ்காரத்தின் சக்தி இந்த தஷ்யாயனத்தின் மூலமும் கிடைக்கிறது, என்றார்.
The post மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் கருவறையில் விழும் சூரியக்கதிர்கள்: செப்.30ம் தேதி வரை காணலாம் appeared first on Dinakaran.