வழக்கமான நாடகம் தானா? சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த ஒன்றிய அரசின் நோக்கம் என்ன?: காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி : காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட் கூறியிருப்பதாவது:சாதிவாரி கணக்கெடுப்புக்கான கோரிக்கையை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பல ஆண்டுகளாக எழுப்பி வருகிறார். காங்கிரசின் தொடர்ச்சியான, வலுவான அழுத்தத்தின் காரணமாக மோடி அரசு சாதி கணக்கெடுப்பை அறிவித்துள்ளது. நாட்டின் மனநிலையை உணர்ந்து, கொள்கை அளவில் இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஆனாலும் உண்மை நிலவரங்களும், புள்ளிவிவரங்களும் குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்துகின்றன. சாதி கணக்கெடுப்பு என்பது மக்களின் பொருளாதார மற்றும் சமூக நிலையை அறியும் முதல் படியாகும். அரசு திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியுமா இல்லையா, நாட்டிலும் அரசு அமைப்புகளிலும் ஒவ்வொரு பிரிவினர் எவ்வளவு பங்களிக்கிறார்கள், நாட்டு மக்களின் கல்வி, பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் என்ன என்பதை அறிந்து கொள்வதும் சாதி கணக்கெடுப்பின் நோக்கம். ஆனால், இந்த சரியான எண்ணம் மோடி அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை.

தாமதப்படுத்துவது, தலைப்புச் செய்திகளை உருவாக்குவது மற்றும் வழக்கமான நாடகத்தை நடத்துவது போன்றவை அரசின் நோக்கம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில், 2027ல் நடத்தப்பட உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தேவையான நிதி ரூ.10 ஆயிரம் கோடி என அரசு கூறும் நிலையில், தற்போது வெறும் ரூ.574 கோடியை மட்டுமே ஒதுக்கி உள்ளனர். பெண்கள் இடஒதுக்கீடு பிரச்சினையில் செய்தது போலவே, சாதி கணக்கெடுப்பையும் தாமதப்படுத்துகிறது. எந்த அறிவிப்புகளும் முறையாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post வழக்கமான நாடகம் தானா? சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த ஒன்றிய அரசின் நோக்கம் என்ன?: காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: