தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார்; சிஐஎஸ்எப் வீரருக்கு ‘பளார்’ விட்ட பெண் ஊழியர்: ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பு

ஜெய்ப்பூர்: தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி, சிஐஎஸ்எப் வீரரை விமான நிறுவன பெண் ஊழியர் அறைந்த சம்பவம், ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் நடந்தது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர், பணியில் இருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர் ஒருவரை பளார் என்று அறைந்தார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி உள்ளது. இவ்விவகாரம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘சிஐஎஸ்எப் வீரர் அளித்த புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட பெண்ணான அனுராதா ராணி கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பெண்ணும் வீரரின் மீது புகார் அளித்துள்ளார். இருதரப்பு உண்மைகளையும் ஆராய்ந்து வருகிறோம். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவ நாளன்று அதிகாலை 4 மணியளவில், பாதுகாப்பு சோதனையின்றி பெண் குழுவினர் சென்றனர்.

அதனை சிஐஎஸ்எப் வீரர்கள் தடுத்தனர். அந்த நேரத்தில் பெண் சிஐஎஸ்எப் வீராங்கனைகள் யாரும் இல்லை. பெண் சிஐஎஸ்எப் வீராங்கனைகள் தான், தங்களை சோதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் விமான பெண் பணியாளர்களுக்கும், வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பெண் பணியாளரான அனுராதா ராணி, திடீரென சிஐஎஸ்எப் வீரரை அறைந்தார். இவ்விவகாரம் குறித்து விமான நிறுவனம், பாதுகாப்பு படை, விமான நிலைய அதிகாரிகளுடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘எங்களது பெண் ஊழியரிடம் சிஐஎஸ்எப் வீரர் தகாத வார்த்தையைப் பயன்படுத்தி பேசினார். பணி நேரம் முடிந்ததும், அவரை தனது வீட்டிற்கு வந்து சந்திக்கும்படி கேட்டுக் கொண்டதாக அந்தப் பெண் பணியாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்’ என்று கூறியுள்ளது.

 

The post தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார்; சிஐஎஸ்எப் வீரருக்கு ‘பளார்’ விட்ட பெண் ஊழியர்: ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: