குரங்கம்மை தாக்கம் எதிரொலி.. மாவட்ட மருத்துவமனைகளில் ஆய்வு செய்க : மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம்

டெல்லி : இந்தியாவில் ஒருத்தருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு சார்பில் அனுப்பியுள்ள கடிதத்தில் , குரங்கு அம்மை தொற்றை கடந்த மாதம் 14ம் தேதி பொது சுகாதார் நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தோலில் அறிகுறி ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக காய்ச்சல் ஏற்படுவதே குரங்கு அம்மையின் அறிகுறி என்றும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களை குரங்கு அம்மை எளிதாக தாக்குகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டால், உயிரிழப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட மருத்துவமனைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் நோய் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகள், தேவையான உபகரணங்கள், போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளதா என ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குரங்கு அம்மை நோய் சூழலை ஒன்றிய சுகாதார அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருவதால் பொது மக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்படுவதை தடுக்க வேண்டியது அவசியம் எனவும் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

The post குரங்கம்மை தாக்கம் எதிரொலி.. மாவட்ட மருத்துவமனைகளில் ஆய்வு செய்க : மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: