செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கொதி கலன் பழுதானதால் அரவை பணிகள் நிறுத்தம்-விவசாயிகள் வேதனை

செய்யாறு : திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கூட்டுறவு சக்கரை ஆலை, வந்தவாசி சாலையில் செயல்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே பரப்பளவில் இரண்டாவது இடத்தில் உள்ள செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சுமார் 33000 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14ம் தேதி அரவை தொடங்கிய நிலையில் சில தினங்களிலேயே கொதிகலன் பழுது ஏற்பட்டு நான்கு நாட்கள் அரவை நிறுத்தப்பட்டது.

பின்னர் கொதிகலன் பழுது நீக்கம் செய்யப்பட்டு அரவை தொடங்கியது. மீண்டும் ஜனவரி மாதமும் கொதிகலன் பழுது ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி மீண்டும் கொதி கலன் பழுது ஏற்பட்டு 4 நாட்களாக 400 க்கும் மேற்பட்ட கரும்பு லோடுகள் தேக்கம் அடைந்தன. இதன்பின், இரண்டாம் தேதி இரவு சரி செய்யப்பட்டு மூன்றாம் தேதி முதல் அரவை தொடங்கியது.

இந்தநிலையில், 4வது முறையாக நேற்று முன்தினம் மீண்டும் கொதிகலன் பழுது ஏற்பட்டது. இதனால் கடந்த இரு தினங்களாக கரும்பு லோடு சுமார் 300-க்கும் மேற்பட்ட லாரிகளிலும் டிராக்டர்களிலும் தேங்கி நிற்கிறது. இதனை அறிந்த கூட்டுறவு கரும்பு சர்க்கரை ஆலை அதிகாரிகள் அருகிலுள்ள செஞ்சி மற்றும் திருத்தணி பகுதிகளில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடுகளை எடுத்துச் செல்லும்படி விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர். சில விவசாயிகள் மட்டும் கரும்பு லோடுகளை மாற்று சர்க்கரை ஆலைகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். இருப்பினும் பெரும்பாலான விவசாயிகள் இங்கேயே அறுவை செய்ய வேண்டும் என காத்துக் கிடக்கின்றனர்.

இதுகுறித்து செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகளிடம் கேட்டபோது, பாய்லர் பிரச்சினை ஏற்பட்டு போதிய அழுத்தம் இல்லாமல் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. நாங்களும் அடிக்கடி சரி செய்து அரவை இடுகிறோம். புதிய பாய்லர் மாற்றினால் அரவை பணிகள் தொடர்ந்து தொய்வின்றி இயக்க ஏதுவாக இருக்கும். ஆனால் பழைய பாய்லர் பழுது நீக்கி இயக்கினால் மீண்டும் மீண்டும் பழுது ஏற்படுகிறது . விரைவாக பாய்லர் பழுது நீக்கி அரவை துவங்க துரித ஏற்பாடுகள் செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு 2.50 லட்சம் டன் கரும்பு அரவை அரைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு நாளைக்கு 4000 டன் கரும்பு அரவை அரைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அடிக்கடி கொதிகலன் பழுதால் அரவை பணிகள் முடக்கம் ஏற்பட்டு காத்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். நிர்வாக சீர்கேடு குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கொதி கலன் பழுதானதால் அரவை பணிகள் நிறுத்தம்-விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: