மேகவெடிப்பால் அதீத கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு இமாச்சலபிரதேசத்தில் 20 தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட துயரம்: 2 உடல்கள் மீட்பு

புதுடெல்லி: இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக அதீத கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் நீர்மின் திட்டப்பணிகளில் ஈடுபட்டு வந்த 20 தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இவர்களில் 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. மீதமுள்ளவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

இமாச்சலப்பிரதேசத்தில் தென்மேற்கு பருவமழையின்போது மிகமிக உச்சகட்டமாக மழை பெய்யும். சில நேரங்களில் மேகவெடிப்பும் ஏற்படும். அந்த வகையில் நேற்றும் இமாச்சலப்பிரதேசத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. காங்க்ரா மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக அதீத கனமழை பெய்தது. இதனால் பியாஸ் நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தர்மசாலாவின் கானியாராவில் உள்ள சௌகானி கா கோட் பகுதியில் இந்திரா பிரியதர்ஷினி நீர்மின் திட்டம் அமைந்துள்ளது. இங்கு வேலை பார்த்து கொண்டிருந்த சுமார் 20 தொழிலாளர்கள், இந்த கனமழையின் காரணமாக அங்குள்ள ஒரு தகர கொட்டகையில் தஞ்சம் புகுந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 20 பேரும் அடித்து செல்லப்பட்டனர்.

இதையடுத்து மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. இதில் 2 தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள தொழிலாளர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தொழிலாளர்கள் இறந்ததை தர்மசாலா எம்எல்ஏ சுதிர் சர்மா தனது சமூக ஊடக பக்கத்தில் உறுதி செய்துள்ளார். காங்க்ரா மாவட்ட கலெக்டரும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இந்த கனமழையால் இமாச்சலப்பிரதேசத்தின் பல பகுதிகளில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குலு மாவட்டத்தில் பல இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டது. அங்குள்ள நதியில் 3 பேர் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘4 வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தவிர, பஞ்சார், சைஞ்ச், கசோல் மற்றும் தீர்த்தன் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு பல வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பஞ்சார் சட்டமன்ற தொகுதியின் விஹாலி கிராமத்தில் மேக வெடிப்பு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே மண்டி மாவட்டத்தில் நீர்மட்டம் உயர்ந்ததால், பண்டோ அணையின் 3 மதகுகள் திறக்கப்பட்டிருக்கின்றன. குலு மாவட்டத்தின் சைஞ்ச் பள்ளத்தாக்கில் மேகவெடிப்பு காரணமாக பியாஸ் நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது,​​ அணையிலிருந்து வினாடிக்கு 28,725 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக நாளை வரை சிம்லாவில் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

The post மேகவெடிப்பால் அதீத கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு இமாச்சலபிரதேசத்தில் 20 தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட துயரம்: 2 உடல்கள் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: