சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சித்தூர் : கோரிக்கைகளை வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தெலுங்கு தேசம் கட்சி இளைஞர் அணி மாவட்ட தலைவர் கஜூர் ராஜேஷ் தலைமையில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் பேசியதாவது:

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் நான் முதலமைச்சரான உடன் வருடத்திற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்குவேன் என வாக்குறுதி அளித்தார். பிரதி வருடம் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி ஜாப் கேலண்டர் விடுதலை செய்வேன் என்றும் கூறினார். ஆனால் அவர் முதலமைச்சராகி 5 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதுவரை ஆந்திர மாநிலம் முழுவதும் 50,000 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆந்திர மாநிலத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வேலை கிடைக்காமல் அண்டை மாநிலங்களுக்கு சென்று கூலி வேலை செய்து வருகிறார்கள்.

அதேபோல் ஏராளமான படித்து வேலை இல்லா இளைஞர்கள் தீய பழக்கங்களுக்கு அடிடையாகி வருகிறார்கள். படித்து வேலை இல்லா இளைஞர்கள் கடந்த ஐந்து வருடத்தில் 1,380 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். கடந்த 2023ம் ஆண்டு மட்டும் 550 தற்கொலை நடந்துள்ளது. கொடுத்த வாக்குறுதியை தவறவிட்டமுதல்வர் ெஜகன்மோகன் உடனடியாக பதவி விலக வேண்டும்.

அதேபோல் வாக்குறுதி வழங்கியபடி ஜனவரி மாதத்திற்குள் உடனடியாக ஜாப் காலண்டர் வெளியிட வேண்டும். கல்வி துறை, வருவாய்த்துறை காவல்துறை உள்ளிட்ட அரசு துறையை சேர்ந்த பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும். இல்லை என்றால் தெலுங்கு தேசம் கட்சி இளைஞர் அணி சார்பில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

முன்னாள் முதல்வர் சந்திரபாபு முதலமைச்சராக இருந்தபோது ஆந்திர மாநிலத்தில் தயிர் தொழிற்சாலை முதல் மொபைல் தொழிற்சாலை வரை பல்வேறு முதலீடு செய்ய பாடுபட்டார். அவருடைய ஆட்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்தது. இதனால் ஆந்திர மாநிலத்தில் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது உள்ள சைக்கோ முதல்வர் ஆட்சியில் தர மற்ற மதுபானங்கள் விற்பனை செய்வது, கஞ்சா போதை பொருட்கள் விற்பனை செய்வது, மணல் கடத்தல் செம்மரக்கட்டை கடத்தல், நிலங்களை ஆக்கிரமிப்பு, எஸ்சி, எஸ்டி மக்களின் பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்துவது, பலாத்காரம் உள்ளிட்ட தீய செயல்கள்தான் இந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

ஒரு முறை செய்த தவறுக்கு ஆந்திர மாநில இளைஞர்கள் மிகவும் வருத்தப்பட்டு வருகிறார்கள். வரும் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும், மீண்டும் முதலமைச்சராக சந்திரபாபு பதவி ஏற்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் ஏராளமான தெலுங்கு தேசம் கட்சி இளைஞர் அணி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், செயலாளர்கள் பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: