சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என அறநிலையத்துறை ஆய்வு செய்ய ஐகோர்ட் ஆணை

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என அறநிலையத்துறை ஆய்வு செய்ய ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. சிதம்பரம் கோயிலில் 4 கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியில் எந்த அனுமதியும் பெறாமல் நந்தவனங்கள் அமைக்கப்படுவதாக புகார் எழுந்தது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 4 கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியில் அனுமதியின்றி நந்தவனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கோயிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களில் அனுமதியின்றி 100 அறைகள் கட்டப்படுவதாகவும் கூறி கோவிலின் தீட்சிதர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் நந்தவனங்கள் அமைப்பதற்காக 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் அதனால் புது திட்சிதர்கள் குழுவால் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அனுமதியின்றி கட்டுமானங்கள் கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பிலும் தமிழ்நாடு தொல்லியல்துறை தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, கோயிலில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு தொல்லியல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என அறநிலையத்துறை ஆய்வு செய்ய ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Related Stories: