சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி; நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம்: 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன உற்சவ திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இன்று (11ம் தேதி) தேரோட்டமும், 12ம் தேதி ஆனி திருமஞ்சன திருவிழாவும் நடைபெற உள்ளது. இதில் ஜூலை 10, 11, 12, 13 ஆகிய 4 நாட்களுக்கு கனகசபையில் ஏறி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய பொது தீட்சிதர்கள் தடை விதித்திருந்தனர். இந்நிலையில் தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் மாநிலத் துணைத் தலைவர் சம்மந்த மூர்த்தி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தொன்று தொட்டு இருந்து வரும் கனகசபையில் ஏறி சுவாமி தரிசனம் செய்து வரும் நடைமுறை தொடர வேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதை ஏற்று கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடை இல்லை என நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து நேற்று காலை முதல் திருச்சோபுரநாதர் கோயில் செயல் அலுவலர் மகேஸ்வரன், விருத்தகிரீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் மாலா ஆகியோர் தலைமையில் சிதம்பரம் நகர போலீசார் பாதுகாப்புடன் கனகசபை மீது பக்தர்கள் ஏறி சுவாமி தரிசனம் செய்தனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் நடராஜர் கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி; நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம்: 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: