சென்னையில் போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க தலைமை செயலாளர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்க முடிவு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல், ஒழுங்குபடுத்துல் மற்றும் வரன்முறை செய்தலை கண்காணிக்க உயர்மட்டக் குழு ஒன்று தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னை போக்குவரத்து நெரிசலை கையாளுதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் முதலமைச்சரின் செயலாளர்-1, உள்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், நெடுஞ்சாலைகள் துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் மற்றும் பல்துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

சென்னையில் நெரிசல் மிகுந்த முக்கிய சாலைகளில் வாகன நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, அவற்றுக்கு இணையான மாற்றுச் சாலைகளை கண்டறிந்து, அவற்றை மேம்படுத்தப்படும். மேலும், சாலைகளில் பல்வேறு பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு, அவை மூடப்படாமல் விடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை சீர்கேடுகளுக்கு தீர்வு காணும் வகையில், சென்னை பெருநகர மாநகராட்சியை பொறுத்த மட்டில், சென்னை மாநகராட்சி, சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து திட்டம், மின்வாரியம், நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து காவல் பிரிவு ஆகிய துறைகளின் அலுவலர்களை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்படும்.

இந்த குழு, சாலைகளில் பள்ளம் தோண்டி பணிகள் மேற்கொள்வதற்கான அனுமதிச் சான்று வேண்டும் நிகழ்வுகளில், ஒற்றைச் சாளர முறையில், இணைய வழியில் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து, பள்ளம் தோண்டும் இடம், காரணம், பணி முடிக்க தேவைப்படும் கால அளவு, பணி முடித்த பின்னர் சாலை சீரமைக்கும் பணி ஆகியவற்றை ஆராய்ந்து, இந்த விவரங்கள் உள்ளடக்கிய அனுமதிச் சான்று வழங்கும். இதற்கான செயலி சென்னை மாநகராட்சியால் விரைவில் உருவாக்கப்படும். போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு, வாகன நிறுத்தம் தொடர்பான வழிகாட்டும் நெறிமுறைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

மேலும், சென்னை மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல், ஒழுங்குபடுத்துல் மற்றும் வரன்முறை செய்தலை கண்காணிக்க உயர்மட்டக் குழு ஒன்று தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இக்குழு இரு மாதங்களுக்கு ஒருமுறை மாநகராட்சி, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, சென்னை மெட்ரோ ரயில் திட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் மற்றும் சென்னை குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் சென்னை போக்குவரத்து மேலாண்மை குறித்து ஆலோசனை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post சென்னையில் போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க தலைமை செயலாளர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்க முடிவு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: