சிமென்ட் ஆலை குடியிருப்பில் 200 சவரன் நகைகள் கொள்ளை

விருதுநகர்: விருதுநகர் – சாத்தூர் நான்குவழிச் சாலையில் தனியார் சிமென்ட் தொழிற்சாலை உள்ளது. இதன் வளாகத்திற்கு உள்ளேயே துணை மேலாளர்கள், அலுவலர்கள் குடியிருப்புகள் உள்ளன. மேலும், இங்குள்ள விருந்தினர் மாளிகையில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள் தங்குவது வழக்கம். இதனால் ஆலை வளாகத்தை சுற்றிலும் 24 மணி நேரமும் ஆலை காவலர்கள் தீவிர ரோந்து பணியில் இருப்பது வழக்கம். மேலும், பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் உள்ளன.

இரண்டு தினங்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவி இங்கு தங்கிச் சென்றார். இந்நிலையில் ஆலையின் மெக்கானிக் பிரிவு துணை பொதுமேலாளர் பாலமுருகன், நிர்வாக பிரிவு துணை பொதுமேலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் சனிக்கிழமை வெளியூருக்கு சென்றுவிட்டனர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், ஆலையை சுற்றியுள்ள பலத்த பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி, இருவரின் வீட்டின் கதவுகளையும் உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டு உள்ளே இருந்த பீரோக்களை உடைத்து அதிலிருந்த தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலமுருகன் வீட்டில் 96 சவரன் நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரூ.2 லட்சமும் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரியவருகிறது. பெங்களூரு சென்றுள்ள ராமச்சந்திரன் திரும்பிவந்து புகார் அளித்த பின்புதான் நகைகள், பணம் குறித்த முழுவிவரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இருவரது வீட்டிலும் சேர்த்து மொத்தம் 200 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

The post சிமென்ட் ஆலை குடியிருப்பில் 200 சவரன் நகைகள் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: