பெங்களூரு: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 வது டி20 போட்டியில் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, கேப்டன் ரோகித் சர்மாவின் அபார சதம் (121ரன்) மற்றும் ரிங்குசிங்கின் அரைசதம் காரணமாக 212 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி குல்புதீன் நைப்-ன் அதிரடியான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களில் 212 ரன்களை சேர்த்து சமன் செய்தது. இதனால் வெற்றியை தீர்மானிக்க ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. அதில் ஆப்கானிஸ்தான் அணி 16 ரன்கள் சேர்த்த நிலையில், இந்திய அணியும் 16 ரன்களை சேர்த்தது. இதனால் 2வது சூப்பர் ஓவருக்கு ஆட்டம் நகர்ந்தது.
அதில் இந்திய அணி 11 ரன்கள் சேர்த்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணி சிக்சர் அடிக்க முயன்று 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை சந்தித்தது. இதன் மூலமாக இந்திய அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ரோகித் சர்மாவும், தொடர் நாயகனாக ஷிவம் துபேவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த வெற்றிக்கு பின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “கடைசியாக 2 சூப்பர் ஓவர் கொண்ட டி20 போட்டி எப்போது நடந்தது என்று நினைவில் கூட இல்லை. ஒரேயொரு முறை ஐபிஎல் தொடரில் 3 முறை பேட்டிங் செய்தேன். இந்த போட்டியை பொறுத்தவரை பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவது முக்கியமான ஒன்றாக இருந்தது. நானும், ரிங்கு சிங்கும் கவனத்தை வேறு எங்கும் வைக்காமல் ஆடினோம். இந்த ஆட்டம் எங்களுக்கு சிறப்பான ஒன்றாக அமைந்தது.
நிச்சயம் எங்களுக்கு அழுத்தம் இருந்தததை ஒப்புக் கொள்ள வேண்டும். அதேபோல் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதுடன் அதிரடியாகவும் ஆட வேண்டும். கடந்த இரு டி20 தொடர்களிலும் ரிங்கு சிங் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை நிரூபித்துவிட்டார். அவரின் பலம் என்னவென்பது அவருக்கு நன்றாக தெரிகிறது. அதனால் எந்த பதற்றமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறார். அதேபோல் கீழ்நிலை பேட்டிங் வரிசையில் அப்படியான ஒரு வீரர் தேவை. ஐபிஎல் தொடர்களில் அவர் என்ன செய்துள்ளார் என்பதை அறிவோம். அதனை இந்திய அணிக்காகவும் செய்ய வேண்டும்’’ என்றார்.
அஸ்வின் லெவல் திங்கிங்…
போட்டிக்கு பின் தலைமை பயிற்சியாளர் ராகுல்டிராவிட் கூறியதாவது: “இது கிரிக்கெட்டின் சிறந்த போட்டி. பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. 2வது சூப்பர் ஓவரில் ரவி பிஷ்னோய் 2 பந்துகளை மிகச் சரியாக வீசி வெற்றியை தேடித்தந்தார். எங்கள் பவுலிங் யூனிட் மிகவும் இளமையான, அனுபவம் குறைவானது. அவர்கள் இன்று அனுபவித்து விளையாடி இருப்பார்கள் என்று நம்புகிறேன். ரோகித் மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தார்.
முதல் சூப்பர் ஓவரில் அவர் ரிட்டையர்டு ஹர்ட் ஆனது அஸ்வின் லெவல் திங்கிங். ரோகித் மற்றும் கோஹ்லி இருவரையும் திரும்ப அணியில் பார்ப்பது நல்ல விஷயம். அவர்கள் அணிக்கு நிறைய விஷயங்களை கொண்டு வருகிறார்கள். ரிங்கு சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து சில மாதம் தான் ஆகிறது. அவரிடம் அமைதியும் முதிர்ச்சியும் மிகச் சிறப்பாக இருக்கிறது, என்றார்.
எனது வாழ்க்கையில் சிறந்த சாதனை: ஷிவம் துபே நெகிழ்ச்சி
தொடர் நாயகன்விருது பெற்ற ஷிவம்துபே கூறுகையில், “இது எனது வாழ்க்கையில் நான் சாதித்த மிகப் பெரிய ஒன்று. இந்த உணர்வு மிகவும் நன்றாக இருக்கிறது. இன்று நல்ல ஸ்கோர் எடுத்தோம். சூப்பர் ஓவருக்கு முன்பாகவே நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நினைத்தோம். ஆனால் இது கிரிக்கெட், இரு அணிகளுமே நன்றாக செயல்பட்டது. எனது பந்துவீச்சில் நான் மேம்படுத்த நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்” என்றார்.
ஆப்கானிஸ்தான் கேப்டன் இப்ராகிம் ஜட்ரன் கூறுகையில், “உண்மையைச் சொல்வது என்றால் ஒட்டுமொத்த ஆட்டத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அதிர்ஷ்டம் இல்லாததால் சூப்பர் ஓவரில் தோற்றோம். இந்த தொடரில் நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய பல பாசிட்டிவான விஷயங்கள் இருக்கிறது. டி20 உலகக் கோப்பையை சந்திப்பதற்கு இது எங்களுக்கு உதவும்.” என்றார்.
The post ரிங்குசிங் தனது பலம் என்னவென்று நிரூபித்துவிட்டார்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி appeared first on Dinakaran.