குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில், யஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றிக்கு 29 ரன் தேவைப்பட்டது. இக்கட்டான நிலையில், ரிங்கு சிங் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை விளாசி த்ரில் வெற்றியை வசப்படுத்தினார். அவரது இந்த அதிரடிக்கு உதவியது கேகேஆர் கேப்டன் நிதிஷ் ராணாவின் பேட் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து ராணா கூறுகையில், ‘ரிங்கு விளையாடிய பேட் என்னோடது தான். முஷ்டாக் அலி டிராபி தொடர் முழுவதும் இந்த பேட்டில் தான் விளையாடினேன். நடப்பு ஐபிஎல் சீசனிலும் முதல் 2 போட்டியில் இதைத்தான் உபயோகித்தேன். டைட்டன்சுக்கு எதிராக புதிய பேட் உடன் விளையாடினேன்.
ரிங்கு வந்து என்னுடைய பழைய மட்டையை கேட்டபோது, முதலில் தயங்கினேன். ஆனாலும், டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த பேட்டை யாரோ கொண்டு வந்து ரிங்குவிடம் கொடுத்துவிட்டனர். எங்கள் வெற்றிக்கு அது உதவியது என்பதில் மிக்க மகிழ்ச்சி. இனி அது அவரது பேட்’ என்றார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ரிங்கு மற்றும் அவரது சகோதரர்கள் தங்கள் தந்தைக்கு உதவியாக காஸ் சிலிண்டர்களை வீடூ வீடாக டெலிவரி செய்வது உள்பட கடினமான பல்வேறு வேலைகளை செய்துவந்தது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் விளையாட ஆரம்பித்த பிறகே தந்தையின் கடன்களை எல்லாம் அடைத்து, புதிய வீட்டையும் வாங்கி குடும்பத்தை கரை சேர்த்துள்ளார் ரிங்கு.
The post கேப்டன் ராணா பேட்டில் பொளந்து கட்டிய ரிங்கு! appeared first on Dinakaran.