வேட்பாளர் செலவுத்தொகை ரூ.95 லட்சமாக உயர்த்தியதால் மக்களவை தேர்தலில் ரூ.1 லட்சம் கோடி பணம் புரளும்: ஓட்டல், விடுதிகளுக்கு ஜாக்பாட்

புதுடெல்லி: வேட்பாளர் செலவுத்தொகையை ரூ.95 லட்சமாக உயர்த்தியதால் இந்த மக்களவை தேர்தலில் ரூ.1 லட்சம் கோடி பணம் புரளும் வாய்ப்பு உள்ளதாக பொருதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 18வது மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. 7 கட்டமாக நடக்கும் இந்த தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது. இந்த மக்களவை தேர்தலில் அருணாச்சலபிரதேசம், கோவா, சிக்கிம் மாநிலத்தை தவிர மற்ற மாநிலத்தில் உள்ள மக்களவை தொகுதியில் ேபாட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவழிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதே போல் டெல்லி தவிர மற்ற யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கு இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.75 லட்சம் வரை செலவழிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதே போல் மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல், சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும், தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் காலியாக உள்ள 26 சட்டப்பேரவை தேர்தல்களில் இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இங்கு டெல்லி மற்றும் பெரிய மாநிலங்களில் ஒரு வேட்பாளர் செலவுத்தொகை ரூ.28 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கோவா, அருணாச்சல், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய சிறிய மாநிலங்களில் செலவுத்தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.28 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நடத்த தேவையான செலவுகள் ஒன்றிய அரசு சார்பிலும், சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்கான செலவுகள் மாநில அரசுகள் சார்பிலும் வழங்கப்படும். அந்த அடிப்படையில் பார்த்தால் ஒன்றிய அரசு 2014மக்களவை தேர்தலில் ரூ.3870 கோடி செலவிட்டுள்ளது. 2019 தேர்தல் செலவுகள் குறித்த தகவல் முழுமையாக வெளியிடப்படவில்லை. இருப்பினும் ரூ.4200 கோடி முதல் ரூ.4500 கோடி வரை செலவிடப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதேசமயம் 2024 மக்களவை தேர்தலுக்காக தற்போது ரூ.5300 கோடி ஏற்கனவே ஒன்றிய அரசு ஒதுக்கி விட்டது. இந்த நிதி மூலம் புதிய மின்னணு இயந்திரம், விவிபேட், போக்குவரத்து, தேர்தல் அதிகாரிகள் தங்குவதற்கான உணவு உள்ளிட்ட தேவைக்கான நிதி, பூத் அமைக்க தேவையான நிதி உள்ளிட்டவை ஒதுக்கப்படும். வேட்பாளர்கள் செலவழிக்க ரூ.95 லட்சம் நிதி, ஒன்றிய அரசு செலவழிக்கும் ரூ.5300 கோடி நிதியால் இந்த மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் அடுத்த 44 நாட்களில் பணம் அதிக அளவு புரளும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்து உள்ளனர். 2019 மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் ரூ.60 ஆயிரம் கோடி அனைத்து தரப்பினர் சார்பிலும் செலவழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த முறை மக்களவை தேர்தலில் ரூ.1 லட்சம் கோடி வரை பணம் புரளும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும் தேர்தல் நடத்தப்படும் காலம் 44 நாட்களாக இந்த முறை நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அதிக அளவு ஜிஎஸ்டி வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, உணவு, தங்குமிடம் உள்ளிட்டவற்றின் மூலம் அதிக அளவு ஜிஎஸ்டி வசூல் கிடைக்கும் என்றும் 5 முதல் 18 சதவீதம் வரை இந்த உயர்வு இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில் சராசரியாக ஒவ்வொரு மாதமும் ரூ.1.67 லட்சம் கோடி வசூலாகி வருகிறது. இனிவரும் 3 மாதங்களிலும் அதிக பணப்புழக்கம் காரணமாக ஜிஎஸ்டி வசூல் அதிக அளவு உயரும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

 

The post வேட்பாளர் செலவுத்தொகை ரூ.95 லட்சமாக உயர்த்தியதால் மக்களவை தேர்தலில் ரூ.1 லட்சம் கோடி பணம் புரளும்: ஓட்டல், விடுதிகளுக்கு ஜாக்பாட் appeared first on Dinakaran.

Related Stories: