மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து 5ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊத்துக்கோட்டை அருகே மாம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (40). இவர் பொன்னேரியில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் நித்தீஷ் (9) தண்டலம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில், நேற்று மிலாது நபி விடுமுறையையொட்டி சிறுவன் நித்தீஷ் அருகே உள்ள கயடை என்ற கிராமத்தில் சக மாணவர்களுடன் அங்குள்ள அங்கன்வாடி மைய வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது அங்குள்ள மரத்தின் மீது ஏறி அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மேலே நித்தீஷ் சென்றான். அப்போது அங்கு பயன்படாத மின் விளக்கு பொருத்தும் கம்பம் ஒன்று கட்டிடத்தின் மீது இருந்துள்ளது. அதை நித்தீஷ் பிடித்துள்ளான். அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததையடுத்து நித்தீஷ் மயங்கி விழுந்தான். இதையறிந்த சக மாணவர்கள் சத்தம் போட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுவன் நித்தீஷை பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஊத்துக்கோட்டை போலீசார் நித்தீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

* 3 பசு மாடுகள் உயிரிழப்பு
திருவள்ளூர் அடுத்த பூண்டி புஷ்பகிரி கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் வடிவேல் (54) மற்றும் முனுசாமி (56). விவசாயியான இவர்கள் தங்களது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து, பால் வியாபாரம் செய்து வருகின்றர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த பலத்த மழையால், அங்குள்ள மின்மாற்றி உள்ள பகுதியில் மழைநீர் தேங்கியிருந்தது. எனவே அந்த இடத்தில் மின் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, மேய்ச்சலுக்காக நேற்று அவ்வழியாகச் சென்ற வடிவேலின் 2 மாடு, முனுசாமியின் ஒரு மாடு என மொத்தம் 3 மாடுகள் அந்த மி்ன்மாற்றியின் கம்பத்தில் உரசியுள்ளது.

அப்போது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே 3 பசு மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன. இது சம்பந்தமாக, அப்பகுதி பொதுமக்கள் உடனே பூண்டி மின்வாரியத்திற்கு தகவல் அளித்துள்ளனர். மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர், பலியான மாடுகளை மீட்டனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்மாற்றி போதிய பராமரிப்பு இல்லாததாலும், மின்வாரிய ஊழியர்களின் அலட்சிய போக்காலும் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்‌.

The post மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி appeared first on Dinakaran.

Related Stories: