கொலை முயற்சி வழக்கில் சாட்சி சொல்வதை தடுக்க தூத்துக்குடியிலிருந்து கூலிப்படை ஏவி உறவினரை கொலை செய்ய முயற்சி: ரவுடி உள்பட 4 பேர் கைது

பெரம்பூர்: கொலை முயற்சி வழக்கில் சாட்சி சொல்ல இருந்த உறவினரை தூத்துக்குடியில் இருந்து கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்ட முயன்ற ரவுடி உள்ளிட்ட 4 பேரை அயனாவரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அயனாவரம் மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்தேவநாத் (21), அதே பகுதியில் சிமென்ட் மற்றும் இரும்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கடைக்குச் சென்ற 2 பேர் சிமென்ட் வாங்க வேண்டும் என்று கூறி பேச்சு கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த சுத்தியல் மற்றும் கோடாரியால் ராஜ்தேவநாத்தை தாக்க முற்பட்டனர். அப்போது, லேசான காயங்களுடன் ராஜ்தேவ்நாத் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை வெட்ட வந்த இருவரும் அவர்களது செல்போன் மற்றும் ஆயுதங்களை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றனர்.

புகாரின்படி, அயனாவரம் உதவி கமிஷனர் ஜவகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்ய வந்த நபர்களில் ஒருவர் விட்டுச்சென்ற செல்போனை எடுத்து அதில் உள்ள எண்களை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த செல்போன் எண் தூத்துக்குடியைச் சேர்ந்தது என்பது தெரிய வந்தது. இதனையடுத்து செல்போன் எண் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து உதவி கமிஷனர் ஜவகரின் தனிப்படை எஸ்ஐ மீனா உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பகுதியில் விசாரித்தனர். இதில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (29), தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த செந்தில் (19), அதே பகுதியைச் சேர்ந்த கோகுல் (18) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

அவர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. கடந்த 2021 ஏப்ரல் மாதம் அயனாவரம் மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்த ஜெய்சிங் (80) மற்றும் சங்கீதா (48) ஆகிய இருவரையும் அதே பகுதியில் வசித்து வந்த உறவினரான ஹரிநாத் (36) என்ற நபர் சொத்து பிரச்னையால் வெட்டி உள்ளார். ஹரிநாத் ரவுடியாக வலம் வந்துள்ளார். இந்த வழக்கு அயனாவரம் போலீசாரால் விசாரிக்கப்பட்டு ஹரிநாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்து தூத்துக்குடியில் வசித்து வந்தார்.

இந்த வழக்கு அல்லிக்குளம் மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேற்று வர இருந்தது. இதில் ஹரிநாத்திற்கு எதிராக அவரது உறவினர்களான தற்போது வெட்டுப்பட்ட ராஜதேவ்நாத்தின் தாய் பொன்னிலா என்பவர் சாட்சியாக ஆஜராக இருந்தார். இதனால் தூத்துக்குடியில் இருந்து மேற்படி 3 பேரையும் அனுப்பி வைத்து, பொன்னிலா அல்லது அவரது மகனான ரவிநாத் ஆகிய இருவரில் யார் கிடைக்கிறார்களோ அவர்களை ஹரிநாத் கொலை செய்யக் கூறியுள்ளார். சம்பவத்தன்று ரவிநாத் கடையில் இல்லாத காரணத்தினால் அவரது தம்பியான ராஜதேவ நாத் கடையில் வியாபாரம் பார்த்துள்ளார்.

திடீரென கடைக்குள் வந்த நபர்கள் அவரை வெட்டிவிட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொரட்டூரில் பதுங்கி இருந்த ஹரிநாத்தையும் அயனாவரம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த அயனாவரம் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சொத்து பிரச்னையில் ஏற்பட்ட மோதலில் ஏற்கனவே 2 பேரை வெட்டிய நிலையில், தற்போது மேலும் ஒரு கொலை நடக்க இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஹரிநாத் கடந்த ஏப்ரல் மாதம் ரவிநாத்தை கொலை செய்ய சென்னைக்கு வந்ததும், ஆனால் அவர் கடையில் இல்லாததால் அவர்கள் திரும்பிச் சென்று விட்டதும் தற்போது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post கொலை முயற்சி வழக்கில் சாட்சி சொல்வதை தடுக்க தூத்துக்குடியிலிருந்து கூலிப்படை ஏவி உறவினரை கொலை செய்ய முயற்சி: ரவுடி உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: