உதவி மேலாளரின் மனைவியுடன் தகாத உறவு; துப்பாக்கிச் சூடு நடத்திய டிவி நடிகர் கைது: தெலங்கானாவில் பரபரப்பு

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த உதவி மேலாளரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்த டிவி சீரியல் நடிகர், துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தால் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஜா தெர்மல் பவர் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரியும் சித்தார்த் தாஸ் (49) என்பவருக்கும், சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் கிரந்தி ஸ்மிதா (42) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

சித்தார்த்தும், ஸ்மிதாவும் தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நான்கு வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டாக டிவி சீரியல் நடிகர் மனோஜ் நாயுடு (35) என்பவரின் சமீர்பேட்டை செலிபிரிட்டி ரிசார்டில் குழந்தைகளுடன் கிரந்தி ஸ்மிதா வசித்து வருகிறார். சமீபத்தில் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில், கடந்த 12ம் தேதி தனது மகனை விசாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது தனது தாய் ஸ்மிதாவும், அவரது காதலன் மனோஜும் தன்னையும், தனது சகோதரியையும் கடுமையாக சித்ரவதை செய்ததாக தந்தை சித்தார்த்திடம் மகன் கூறினார். இதனால் ஆவேசமடைந்த சித்தார்த் தாஸ், நேற்று முன்தினம் செலிபிரிட்டி ரிசார்ட்சுக்கு சென்றார்.

அங்கிருந்த மனைவியிடம், தனது மகளை தன்னுடன் அனுப்புமாறு சித்தார்த் தாஸ் கேட்டுக் கொண்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த மனோஜ் நாயுடு, ஆத்திரமடைந்து தான் வைத்திருந்த கைத்துப்பாக்கி மூலம் சித்தார்த் தாசை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய சித்தார்த் தாஸ், 100 என்ற கட்டமில்லாத தொலைபேசி எண்ணில் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மனோஜ் நாயுடுவிடம் இருந்த கைத்துப்பாக்கியை கைப்பற்றினர்.

இதுகுறித்து பாலாநகர் டி.சி.பி., கூறுகையில், ‘துப்பாக்சிச் சூடு சம்பவம் தொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். சித்தார்த் தாஸ் அளித்த புகாரின்படி, மனோஜ் நாயுடு மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கியில் என்ன வகையான வெடிமருந்து இருந்தது? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். மனோஜ் நாயுடுவை கைது செய்துள்ளோம்’ என்றார்.

The post உதவி மேலாளரின் மனைவியுடன் தகாத உறவு; துப்பாக்கிச் சூடு நடத்திய டிவி நடிகர் கைது: தெலங்கானாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: