ஆசிய விளையாட்டு போட்டி: சாய்னா விலகல்

புதுடெல்லி: ஆசிய விளையாட்டு போட்டித் தொடருக்கான தேசிய தகுதி சுற்றில் இருந்து நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் காயம் காரணமாக விலகியுள்ளார். ஆசிய விளையாட்டுப்போட்டியின் 17வது தொடர் 2022ல் சீனாவில் நடைபெற இருந்தது. கொரோனா காரணமாக பலமுறை தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு செப்.23 – அக்.8 வரை சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான பணியில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் விளையாட்டு சங்கங்கள் தீவிரமாக உள்ளன.

அதன் தொடர்ச்சியாக இந்திய பேட்மின்டன் சங்கம் (பிஏஐ) சார்பில் ஐதராபாத்தில் தேர்வு முகாம் நடைபெற உள்ளது (மே 4-7). இதில் பங்கேற்க பேட்மின்டன் வீரர், வீராங்கனைகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், 2 முறை காமன்வெல்த் சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா நெஹ்வால், இந்த தகுதி சுற்றில் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பிஏஐ செயலாளர் சஞ்ஜெய் மிஸ்ரா கூறுகையில், ‘உடல்தகுதி பிரச்னை காரணமாக சாய்னா தேர்வு முகாமில் பங்கேற்கமாட்டார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் விளையாடும் குஷால் ராஜ், பிரகாஷ் ராஜ் ஆகியோரும் தேர்வு முகாமில் கலந்துகொள்ள மாட்டார்கள். மற்றவர்கள் திட்டமிட்டபடி பங்கேற்பார்கள்’ என்றார். தேர்வு முகாமில் இருந்து சாய்னா விலகியிருப்பதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்தும் அவர் விலகுவது உறுதியாகி உள்ளது. ஒலிம்பிக்கில் 2முறை பதக்கம் வென்ற பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரணாய், கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ், அரிகரன், வர்ஷினி அஸ்வினி பொன்னப்பா, அஷ்வினி பட், த்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் என 25க்கும் மேற்பட்டவர்கள் ஐதராபாத் தேர்வு முகாமில் பங்கேற்க உள்ளனர்.

The post ஆசிய விளையாட்டு போட்டி: சாய்னா விலகல் appeared first on Dinakaran.

Related Stories: