சென்னையில் 182 இடங்களில் போதை எதிர்ப்பு மற்றும் “காவல் உதவி”செயலியின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

சென்னை: சென்னையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மொத்தம் 182 இடங்களில் போதை எதிர்ப்பு மற்றும் “காவல் உதவி” செயலியின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 11.08.2022 அன்று “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற திட்டத்தை துவக்கி வைத்து, தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிக்க உத்தரவிட்டதன் பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில் போதை ஒழிப்பு குறித்து, காவல் துறை சார்பில் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு நேரில் சென்று போதை எதிர்ப்பு மற்றும் “காவல் உதவி” செயலி (Kaaval Uthavi App) குறித்தும், அது செயல்படும் விதம் குறித்தும், இச்செயலியின் பயன்பாடு குறித்து எடுத்துரைத்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, நேற்று (10.04.2023) காவல் ஆணையாளரின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், இணை ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் துணை ஆணையாளர்கள் நேரடி கண்காணிப்பில் உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினரால் போதை எதிர்ப்பு மற்றும் காவல் உதவி செயலி குறித்து ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. சென்னை பெருநகரில் உள்ள 51 பள்ளிகள், 15 கல்லூரிகள் மற்றும் அதிகளவில் பொதுமக்கள் கூடும் 116 இடங்கள் என மொத்தம் 182 இடங்களில் காவல் குழுவினர் போதை எதிர்ப்பு மற்றும் காவல் உதவி செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி போதை பொருள் எதிர்ப்பு மற்றும் தீமைகள் குறித்தும் காவல் உதவி செயலியின் பயன் குறித்தும் எடுத்துரைத்தனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 2,611 பள்ளி மாணவர்கள், 578 கல்லூரி மாணவர்கள் மற்றும் 2,485 பொதுமக்கள் என 5,674 நபர்கள் கலந்து கொண்டனர். மேலும் இச்செயலியை பதிவிறக்கம் செய்வது குறித்தும் பயன்படுத்தும் விதம் குறித்தும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகளிடையே எடுத்துரைத்து காவல் உதவி செல்போன் செயலி குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை (Awareness Pamphlets) வழங்கினார். மேலும், இச்செயலியை தரவிறக்கம் செய்வது மற்றும் பயன்படுத்தும் விதம் குறித்து விளக்கப்பட்டது. அதன்பேரில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் காவல் உதவி செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்தனர்.

Related Stories: