சென்னை: மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, உயர்த்தப்பட்ட அண்ணா பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுக் கட்டணம் நிறுத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் வெளியியிட்டிருந்த அறிவிப்பின்படி, இளநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் தாளுக்கு ரூ.150லிருந்து ரூ.225 ஆகவும், முதுநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் தாளுக்கு ரூ.450லிருந்து 675 ஆகவும் உயர்த்தப்பட்டிருந்தது. இதுதவிர ஆய்வறிக்கை கட்டணம் இளநிலை மாணவர்களுக்கு ரூ.300ல் இருந்து ரூ.450 ஆகவும், பட்டச் சான்றிதழுக்கான கட்டணம் ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டது.
சான்றிதழ்களை டிஜிலாக்கரில் பதிவேற்றம் செய்வதற்கான கட்டணமும் ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்களின் நடைமுறைச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்றவாறு பல்கலைக்கழகங்களின் வருவாயை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக காரணம் சொல்லப்பட்டது. இளநிலை பொறியியல் பயிலும் மாணவர்கள் பருவத்துக்கு 9 தேர்வுகள் எழுத வேண்டும். ஒவ்வொரு தாளுக்குமான கட்டணம் ரூ.75 ஆக அதிகரித்ததால் கூடுதல் தொகையை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த செய்தி ஏழை எளிய மாணவர்களுக்கு மிகவும் வேதனை அளிக்க கூடியதாக இருந்தது. இதனைத்தொடர்ந்து மாணவர்கள் பலரும் கட்டணத்தை தங்களால் கட்ட இயலாது எனவும், அதனைத் திரும்ப பெறும்படி கோரிக்கைகள் வைத்து வந்தனர். அதன்படி, கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அண்ணா பல்கலைக் கழகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் பொன்முடி கூறுகையில்,செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு குறித்த அறிவிப்பானது அண்ணா பல்கலைக்கழக இணையதள பக்கத்தில் வெளியானது.
இது கடந்த ஆண்டு சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு. ஆனால் அப்போது அதனை நான் நிறுத்தி வைத்திருந்தேன். இந்த வருடம் மீண்டும் அந்த அறிவிப்பு வெளியானதால் கிராமப்புற மாணவர்கள் பலரும் கவலை அடைந்தனர். மாணவர்கள் சார்பில் கட்டண உயர்வை நிறுத்தக் கோரி கோரிக்கைகளும் வைக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த கட்டண உயர்வானது மாணவர்களை மிகவும் பாதிக்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்னிடம் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்களுடன் இணைந்து ஆலோசித்து ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கப்பட்ட இந்த தேர்வுக் கட்டணமானது நிறுத்தி வைக்கப்படுகிறது. இனி வரும் காலங்களிலும் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்படாது. புதிய சிண்டிகேட் ஆட்சி மன்றத்தில் கொண்டுவரப்பட்டால் மட்டுமே இது அமல்படுத்தப்படும். அதுவரை இந்த கட்டணம் மாற்றப்படாது. எனவே மாணவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.
தன்னாட்சி பெறாத கல்லூரிகள் வாங்கும் அதே கட்டணத்தைதான் தன்னாட்சிக் கல்லூரிகளும் வாங்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் முறைகேடுகள் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த முறைகேடுகள் இப்போது அல்ல 10 வருடங்களாக நடைபெற்றுள்ளது. எனவே கடந்த 10 ஆண்டுகளின் தரவுகளை கேட்டுள்ளோம். அதன்படி வெகு விரைவில் இந்த விசாரணை முடிந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு ரத்து: அமைச்சர் பொன்முடி தகவல் appeared first on Dinakaran.