×
Saravana Stores

விருதுநகரில் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

விருதுநகர்: விருதுநகர் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இன்றும் (9.11.2024), நாளையும் (10.11.2024) விருதுநகர் மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (9.11.2024) மதன் பட்டாசு தொழிற்சாலைக்கு நண்பகல் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, இன்று (9.11.2024) மாலை, அமைச்சர் பெருமக்கள் எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு. சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா, மாவட்ட ஆட்சித் தலைவர் வீ.ப.ஜெயசீலன், மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள், முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள், சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றின் தற்போதைய நிலை ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வு கூட்டத்தின்போது, விருதுநகரில் அரசினர் குழந்தைகள் காப்பகம் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருவதை அறிந்து, அக்காப்பகத்தை ஆய்வு மேற்கொள்வதற்காக சென்றார். முதலமைச்சர் அவர்கள் அக்காப்பகத்திற்கு செல்லும் வழியில் சூலக்கரை மேட்டில் உள்ள அடுமனைக்கு (Bakery and Cake Shop) சென்று, மாணவியர்களுக்கு கேக், பிஸ்கட்டுகள் மற்றும் அருகில் இருந்த பழக்கடையிலிருந்து பழங்களையும் வாங்கிச் சென்று அம்மாணவியர்களுக்கு வழங்கினார்.

சமூக நலத்துறையின் கீழ் இயங்கிவரும் இக்காப்பகம் 1984-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, சாத்தூரில் செயல்பட்டு வந்தது. அதன் பிறகு, விருதுநகர் சூலக்கரையில் 1999 ஆம் ஆண்டு முதல் அரசு கட்டடத்தில் அரசு குழந்தைகள் காப்பகமாக, அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம் எனும் பெயரில் செயல்பட்டு வருகிறது.

தற்போது, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் என்ற துறையின் கீழ் செயல்படும். அரசு குழந்தைகள் காப்பகத்தில் 49 மாணவர்கள் வரை தங்குவதற்கு அனுமதி பெறப்பட்டு, 35 மாணவியர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இம்மாணவியர்கள் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை காப்பக வளாகத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியிலும், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை சூலக்கரையில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்று வருகின்றனர்.

முதலமைச்சர் அவர்கள் இக்குழந்தைகள் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கி பயிலும் மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம். தங்கும் வசதிகள். அவர்களது கல்வி விவரங்கள் குறித்தும் கேட்டறிந்து, கல்வி தான் யாராலும் அழிக்க முடியாத செல்வம் அதனால் கல்வியை தடையின்றி நன்முறையில் கற்று சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையினை அடைய வேண்டும் என்றும் மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அத்துடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிட இந்த அரசு எப்போதும் தயாராக உள்ளது எனவும், சிறந்த முறையில் கல்வி பயில வேண்டும் எனவும் அறிவுறுத்தி, அம்மாணவியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அம்மாணவியர் முதலமைச்சர் அவர்கள் அவரது பல்வேறு அலுவல்களுக்கு இடையே காப்பகத்திற்கு வருகைத்தந்து எங்களுடன் கலந்துரையாடியது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்து, முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி கூறினர்.

இக்காப்பகத்தில் மாணவியர்களுக்கு தையல் வகுப்பு, தோட்ட வேலைகள் மேற்கொள்ளுதல், விளையாட்டு போன்றவற்றை தினசரி நடவடிக்கைகளாக மேற்கொள்வது என்பது பாராட்டுக்குரியது என்ற முதலமைச்சர் அவர்கள், இவற்றை சிறப்பாக செய்துவரும் மாணவியர்களையும், காப்பக பணியாளர்களையும் பாராட்டினார்.

The post விருதுநகரில் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Annai Satya Ammayar Memorial Government Children's Archive ,Virudhunagar ,K. Stalin ,Anna Satya Ammayar Memorial Government Children's Archive ,Tamil Nadu ,Virudhunagar district ,Chief Minister of ,Tamil ,Nadu ,
× RELATED பட்டாசு ஆலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு