×

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலில் அமிர்தவல்லி தாயார் திருக்கல்யாண உற்சவம்

சோளிங்கர்: சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 108 திவ்ய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ஐப்பசி மாதத்தில் அமிர்தவல்லி தாயார் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த திருக்கல்யாண வைபவத்தை கோயில் தல ஆச்சாரிய புருஷரான தொட்டாச்சாரியார் நடத்தி வைப்பதாக ஐதீகம். அதன்படி இந்த ஆண்டு அமிர்தவல்லி தாயார் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.

இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத பக்தோசித பெருமாள், அமிர்தவல்லி தாயார், ஆண்டாள் மற்றும் தொட்டாச்சார்யார் தனித்தனி கேடயங்களில் மங்கள வாத்தியங்கள் முழங்க கோயில் வளாகத்தில் உள்ள கருங்கல் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு அமிர்தவல்லி தாயார், ஸ்ரீ தேவி பூதேவி சமேத பக்தோசித பெருமாள், ஸ்ரீஆண்டாள் நாச்சியார் மற்றும் தொட்டாச்சார்யார் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் பல்லக்கில் திருக்கல்யாண சீர்வரிசை புறப்பாடு நடந்தது. இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பக்தோசிதப்பெருமாள் மங்கள வாத்தியங்களுடன் காசி யாத்திரை புறப்பாடு கண்டருளினார்.
பின்னர் அமிர்தவல்லி தாயாருக்கும், பக்தோசித பெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலில் அமிர்தவல்லி தாயார் திருக்கல்யாண உற்சவம் appeared first on Dinakaran.

Tags : Amritdavalli ,Solinger Lakshmi Narasimmar Swami Temple ,Solinger ,Solingar Lakshmi Narasimma Swami Temple ,Ranipetta District ,
× RELATED சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில்...