ஆந்திராவில் நேர்ந்த சோகம்: 20 நாட்களில் தக்காளி விற்று ரூ.30 லட்சம் வருவாய் ஈட்டிய விவசாயி கொலை

பெங்களூரு: ஆந்திராவில் 20 நாட்களில் தக்காளி விற்று ரூ.30 லட்சம் வருவாய் ஈட்டிய விவசாயி கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வியாபாரிகள் தக்காளியை பதுக்கி வைத்திருப்பதால்தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. தக்காளியை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தக்காளியில் அதிக வருவாய் ஈட்டிய ஆந்திரா விவசாயி ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆந்திரா மாநிலம், அன்னமய்யா மாவட்டத்தில் மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜசேகர் ரெட்டி ஆவார். இவர் தனது தோட்டத்தில் தக்காளி பயிரிட்டு அறுவடை செய்துள்ளார். தற்போது நிலவும் தக்காளியின் விலை உயர்வால் 20 நாட்களில் ரூ.30 லட்சம் வரை லாபம் ஈட்டியுள்ளார். இவர் தனது தோட்டத்திலேயே தங்கியிருந்து தக்காளியை பாதுகாத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ராஜசேகர் ரெட்டி தனது தோட்டத்தில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜசேகர் ரெட்டியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, தக்காளி விற்பனை மூலம் ராஜசேகர் ரெட்டி சம்பாதித்து வைத்திருந்த பணத்தை கொள்ளை அடிக்கவே அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கொலையாளிகள் இருசக்கர வாகனத்தில் வந்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

The post ஆந்திராவில் நேர்ந்த சோகம்: 20 நாட்களில் தக்காளி விற்று ரூ.30 லட்சம் வருவாய் ஈட்டிய விவசாயி கொலை appeared first on Dinakaran.

Related Stories: