வடசென்னை பகுதியில் மழைக்காலங்களில் வீடுகளை வெள்ளம் சூழாமல் உரிய நடவடிக்கை எடுப்பேன்: அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ உறுதி

சென்னை: வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ நேற்று கொடுங்கையூர் எழில் நகர், ஆர்கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எழில் நகர் பகுதியில் சுயம்பு ஏற்பாட்டில் பொக்லைன் இயந்திரம் மூலம் ரோஜா பூக்களை வேட்பாளர் மீது தூவி அவரை வரவேற்றனர். இதேபோல் வண்ணாரப்பேட்டை 42வது வட்டத்தில் வட்டச் செயலாளர் அன்பு மற்றும் வினோத் ஆகியோர் ஏற்பாட்டில் ராட்சத மாலையை அதிமுக கொடி கலரில் செய்து கிரேன் மூலம் கொண்டு வந்து பிரசாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர் ராயபுரம் மனோ மற்றும் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், மாவட்டச் செயலாளர் ஆர்எஸ் ராஜேஷ் ஆகியோருக்கு அணிவித்தனர்.

அதைத் தொடர்ந்து ராயபுரம் மனோ பேசுகையில், ‘‘உங்களுடைய அடிப்படை பிரச்னைகளை சரி செய்து தருவேன். இந்த பகுதியில் மழைக்காலங்களில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வீடுகளில் வெள்ள நீர் புகுந்து கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளார்கள். வெற்றி பெற்றவுடன் முழு மூச்சில் இதற்கு நடவடிக்கை எடுப்பேன். கடந்த ஆட்சியில் செய்யாத திட்டங்களை செய்து கொடுப்பேன். குடிநீர் பிரச்னை, கழிவு நீர் பிரச்னை, மின்சார பிரச்னை, சாலை வசதி என எந்த பிரச்னையாக இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம். என்னை தொடர்பு கொள்ள என்னுடைய தொலைபேசி எண்ணை வெற்றி பெற்றவுடன் ஒவ்வொரு பகுதியிலும் எழுதி வைப்பேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பகுதிச் செயலாளர் நித்தியானந்தம், சீனிவாச பாலாஜி, வட்டச் செயலாளர்கள் விநாயகமூர்த்தி, மரக்கடை விஜி, இபி சேகர், அன்பு, சீனிவாசன், ஹரிதாஸ் மற்றும் அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post வடசென்னை பகுதியில் மழைக்காலங்களில் வீடுகளை வெள்ளம் சூழாமல் உரிய நடவடிக்கை எடுப்பேன்: அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ உறுதி appeared first on Dinakaran.

Related Stories: