கட்சியை தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதால் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறுமா அதிமுக? மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி இன்று முக்கிய முடிவு

சென்னை: கட்சியினரை தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதால் பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை எடப்பாடி தலைமையில் சென்னையில் நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜ போட்டியிட்டது. இதில் பாஜ 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பாஜ தான் காரணம் என்று அதிமுக தரப்பில் இருந்து பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டதால் தான் பாஜவுக்கு பின்னடைவு ஏற்பட்டது என்று பாஜ தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்குள் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.

குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜ தலைவர் அண்ணாமலை இடையே கடும் மோதல் இருந்து வருகிறது. ஏனெனில், இருவரும் மேற்கு மண்டலத்தைச் சார்ந்தவர்கள் என்பதோடு ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்குள்ளும் யார் பெரியவர்கள் என்பதில் இகோ நிலவி வருகிறது. இதனால், ஒருவரை ஒருவர் காலி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த நேரத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து பேசும்போது சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அண்ணா குறித்து கருத்து தெரிவிக்க அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது. அண்ணா குறித்து பேசியதற்கு அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், சொன்ன கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று அண்ணாமலை கூறிவிட்டார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் தொடங்கி செல்லூர் ராஜூ வரை, அண்ணாமலையை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தனர். வார்த்தை போரின் உச்சக்கட்டமாக, பாஜவுடன் கூட்டணி இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 18ம் தேதி அதிரடியாக அறிவித்தார். என்னுடைய அறிவிப்பு அதிமுகவின் அறிவிப்பு தான் என்றே அவர் பேட்டியில் கூறியிருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். அதேநேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜவை வெளியேற்றுதற்கு அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மீண்டும் திரும்பி வராதீர்கள் என்ற வாசகம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

பிரச்னையை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் சமூக வலைதளங்களிலோ, பொதுவெளியிலோ அதிமுக குறித்தோ கூட்டணி குறித்தோ விமர்சிக்க வேண்டாம் என பாஜவினருக்கு அக்கட்சி தலைமை உத்தரவிட்டது. அதேபோல, பாஜவை விமர்சிக்க கூடாது என அதிமுகவினருக்கு அக்கட்சி தலைமை உத்தரவிட்டது. அதிமுக கூட்டணியில் பாஜ இல்லை என்று அறிவித்த 4 நாளில் அதிமுக திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றியது. இதற்கு எஸ்.பி.வேலுமணியின் அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. நாம் வேண்டுமென்றால் பாஜ டெல்லி மேலிடத்திடம் பேசி முடிவை அறிவிக்கலாம் என்று கூறினார். டெல்லி மேலிடத்திற்கு எஸ்.பி.வேலுமணியை அனுப்பினால் பேச்சுவார்த்தை தோல்வி என்றாலும் கூட, இங்கே வந்து பேச்சுவார்த்தை வெற்றி என்று கூறி விடுவார் என்று எடப்பாடி யோசித்தார்.

இதையடுத்து அவருடன் தனது ஆதரவாளரான சி.வி.சண்முகத்தையும் டெல்லி மேலிடத்திடம் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து கடந்த 22ம் தேதி அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 5 முன்னாள் அமைச்சர்கள் டெல்லிக்கு படையெடுத்தனர். அங்கு அவர்கள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிட திட்டமிட்டிருந்தனர். இதற்காக ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், பாஜ மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் ஏற்பாட்டில் அவர்கள் பாஜ மேலிட தலைவர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சந்திப்பின் போது பாஜ தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தவும் அதிமுக தலைவர்கள் முடிவு எடுத்து இருந்தனர்.

ஆனால், அண்ணாமலையை மாற்ற முடியாது என்ற முடிவில் அமித்ஷா இருந்தார். இதனால், அவர் அதிமுக தலைவர்களை சந்திக்க மறுத்து விட்டார். தொடர்ந்து அதிமுக தலைவர்கள் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினர். அப்போது அவரும் அண்ணாமலையை மாற்ற முடியாது. அவர் மாநில தலைவராக நீடிப்பார். எங்கள் கட்சியின் மாநில தலைவரை மாற்றுமாறு நீங்கள் சொல்ல வேண்டாம். போய் தேர்தல் தேர்தல் வேலையை கவனிக்கும்படி ஜே.பி.நட்டா எச்சரித்து அனுப்பி விட்டார். இதனால் ெடல்லி சென்ற அதிமுக தலைவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அப்போது அவர்களுக்கு உள்ளேயே பெரும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ‘‘அதிமுகவில் பாஜ இல்லை என்று அறிவித்தாச்சு. அதன் பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது அவமானமாக உள்ளது’’ என்று பேசியதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அமித்ஷாவை சந்திக்க நேரம் வழங்காதது எடப்பாடி தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதினார். இதனால், அவர் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறும் மனநிலைக்கு வந்து விட்டார். இதனால் தமது மீது வழக்கு போட்டாலும் பரவாயில்லை என்ற முடிவில் அவர் இருந்து வருகிறார். ஆனால், சில முன்னாள் அமைச்சர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர் போன்றவர்கள் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை என்றால் அவமானத்தை பொறுத்து கொண்டு பாஜ கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்து முடிவு எடுப்பது தொடர்பாக இன்று மாலை 3.45 மணியளவில் அவசரமாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி கூட்டியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜ இல்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டது. இப்போது திரும்ப முடிவு எடுக்க போகிறார்கள். அதாவது, அதிமுக கூட்டணியில் பாஜ இல்லை என்பதை அறிவிக்கவா அல்லது கூட்டணி உண்டு என்று கூறி தொடர்வதா என்பது குறித்து கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் பாஜவை தவிர்த்து தனது கூட்டணியில் உள்ள அணிகளுடன் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

பொதுவாக ஒரு கூட்டணியில் இருந்து ஒரு கட்சியை வெளியேற்றினால் அது பரபரப்பாக பேசப்படும். ஆனால், அதிமுக விஷயத்தில் அது தலைகீழாக மாறியுள்ளது. அதாவது, முதலில் அதிமுக கூட்டணியில் பாஜ இல்லை என்று அறிவித்தார். பின்னர் அவர்களே டெல்லிக்கு போய் பாஜ தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இது கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிக்கு அழகா என்று அதிமுக தொண்டர்களே நினைக்க தொடங்கியுள்ளனர். இதை அதிமுக தொண்டர்கள் ரசிக்கவில்லை.

அதே நேரத்தில் நேற்று சென்னையில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘அதிமுக கூட்டணியில் பாஜ இல்லை என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ரெய்டு பூச்சாண்டிக்கு எல்லாம் அதிமுக பயப்படாது’ என்று ஒன்றிய பாஜ அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவர் பேட்டியிருந்தது. இதனால், இன்று மாலை நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் அண்ணா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. இதனால், இன்று நடக்கும் கூட்டம் அதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கட்சியை தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதால் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறுமா அதிமுக? மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி இன்று முக்கிய முடிவு appeared first on Dinakaran.

Related Stories: