அதானியுடன் உள்ள நெருக்கம் குறித்த என் கேள்விக்கு பிரதமர் இன்னும் பதில் அளிக்காதது ஏன்? வயநாட்டில் ராகுல் காந்தி ஆவேசம்

திருவனந்தபுரம்: அதானியுடன் உள்ள நெருக்கம் குறித்து நான் பலமுறை கேள்வி எழுப்பியும், அதற்கு பிரதமர் மோடி இன்னும் பதில் அளிக்காதது ஏன் என்று வயநாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக ராகுல் காந்தி நேற்று தன்னுடைய சொந்த தொகுதியான வயநாட்டுக்கு வந்தார். அவருடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் பிரியங்கா காந்தியும் வந்திருந்தார். இருவரும் கல்பெட்டாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட சத்தியமேவ ஜெயதே என்ற பெயரில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

பேரணியின் முடிவில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ராகுல் காந்தி பேசியதாவது: நீங்கள் எனக்கு அன்பும், ஆதரவும் அளித்து என்னை உங்களுடைய குடும்ப உறுப்பினராக மாற்றி விட்டீர்கள். எம்பி என்பது ஒரு பதவி மட்டும் தான். அந்தப் பதவியில் இருந்து வேண்டுமென்றால் பாஜவால் என்னை நீக்க முடியும். என்னுடைய வீட்டை காலி செய்ய வைக்க முடியும். என்னை சிறையில் அடைக்கவும் அவர்களால் முடியும். ஆனால் மக்களிடமிருந்து என்னை பிரிக்க அவர்களால் ஒரு போதும் முடியாது.

எம்பி பதவியில் நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வயநாட்டு மக்களுடனான உறவு என்னுடைய கடைசி காலம் வரை நீடிக்கும். அதானியுடன் உள்ள நெருக்கம் குறித்து நான் நாடாளுமன்றத்தில் பலமுறை கேள்வி கேட்டேன். ஆனால் இதுவரை அதற்கு பிரதமர் மோடி எந்த பதிலும் தரவில்லை. என் மீது உண்மைக்கு மாறான தகவல்கள் பரவியபோது அது குறித்து விளக்கம் அளிப்பதற்காக நான் பலமுறை சபாநாயகரிடம் முறையிட்டேன். சபாநாயகர் அலுவலகத்திற்கு 2 முறை நேரடியாக சென்று பேசினேன். ஆனால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறி அவர் தன்னுடைய இயலாமையை என்னிடம் விளக்கினார்.

எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் நான் கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன். பத்திரிகை தகவல்களின் அடிப்படையில் உலக செல்வந்தர்களின் பட்டியலில் 609வது இடத்தில் இருந்த அதானி 2வது இடத்திற்கு வந்தது எப்படி? நாட்டிலுள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்பட சொத்துக்கள் அனைத்தும் அதானிக்கு சொந்தமாகி வருகிறது. ஆட்சியாளர்களே நாடாளுமன்றத்தை முடக்குவதை நான் வேறு எங்குமே கேள்விப்பட்டதில்லை. எம்பி பதவியை ரத்து செய்ததன் மூலம் நான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு தெரிந்து விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

  • கேள்வி கேட்பவர்களை பார்த்து ஒன்றிய அரசு பயப்படுகிறது: பிரியங்கா

    வயநாட்டில் பிரியங்கா காந்தி பேசியது: ராகுல்காந்தி ஒரு தைரியசாலி. அதனால் தான் அவரது வாயை மூட ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். யாருடைய முகத்திற்கு நேராகவும் கேள்வி கேட்க ராகுல் காந்தி பயப்பட மாட்டார். கேள்விகளை கேட்பது என்பது ஒரு மக்கள் பிரதிநிதியின் கடமையாகும். ஆனால் கேள்வி கேட்பவர்களை பார்த்து ஆட்சியாளர்கள் பயப்படுகின்றனர். தினமும் விலை உயர்ந்த உடைகளை மாற்றுவதில் கவனம் செலுத்தும் பிரதமர் மோடி, நாட்டிலுள்ள ஏழைகள் படும் துன்பத்தை சட்டை செய்வதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

The post அதானியுடன் உள்ள நெருக்கம் குறித்த என் கேள்விக்கு பிரதமர் இன்னும் பதில் அளிக்காதது ஏன்? வயநாட்டில் ராகுல் காந்தி ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: