மதுராந்தகம் அருகே பரபரப்பு; சமையல் செய்யும்போது காஸ் சிலிண்டர் வெடித்ததில் லாரி தீப்பிடித்து எரிந்தது: டிரைவர் தப்பினார்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே ஜிஎஸ்டி சாலையோரத்தில் லாரி நிறுத்துமிடத்தில் நின்றிருந்த சிமென்ட் டேங்கர் லாரி கேபினில் மினி காஸ் சிலிண்டரில் டிரைவர் சமைத்து கொண்டிருந்தார். இதில் அந்த சிலிண்டர் வெடித்ததில் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது. எனினும், எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மதுராந்தகம் அருகே படாளம் பகுதியில் டேங்கர், கன்டெய்னர் லாரிகள் என பல்வேறு கனரக வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளது. இங்கு நிறுத்தப்பட்டிருக்கும் லாரி கேபின்களில் பல டிரைவர்கள் ஸ்டவ் மூலம் இரவு உணவு தயாரிப்பது வழக்கம்.

அதேபோன்று நேற்று மாலை தென்மாவட்டத்தில் இருந்து வந்த ஒரு சிமென்ட் டேங்கர் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அந்த லாரியை அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த டிரைவர் அலெக்சாண்டர் (35) என்பவர் ஓட்டி வந்துள்ளார். பின்னர் இரவு நேரத்தில் உணவு சாப்பிடுவதற்காக, லாரி கேபினில் அமர்ந்தபடி மினி காஸ் சிலிண்டர் மூலம் அடுப்பில் டிரைவர் அலெக்சாண்டர் சமைத்து கொண்டிருந்தார். அப்போது ஸ்டவ் கவிழ்ந்து, சிறிய காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. சிறிது நேரத்தில் லாரி கேபினுக்குள் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிய துவங்கியது.

டிரைவர் அலெக்சாண்டர் அலறியடித்து கொண்டு கீழே குதித்து தப்பினார். தகவலறிந்து மதுராந்தகம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி, டேங்கர் லாரியில் பரவிய தீயை அணைத்தனர். எனினும், டேங்கர் லாரியின் முன்பகுதி முற்றிலும் எரிந்து நாசமாகியது. இவ்விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. புகாரின்பேரில் படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post மதுராந்தகம் அருகே பரபரப்பு; சமையல் செய்யும்போது காஸ் சிலிண்டர் வெடித்ததில் லாரி தீப்பிடித்து எரிந்தது: டிரைவர் தப்பினார் appeared first on Dinakaran.

Related Stories: