500 பேர் கைது பெண் குழந்தைகளை காப்போம் கற்பிப்போம் பயிற்சி முகாம் துவக்கம்

திருச்சி, டிச.3: சமூக நலத்துறையின் மூலம் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் தொடர்பாக பயிற்சியாளர் பயிற்சி முகாம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தலைமை வகித்து ஊரக வாழ்வாதார இயக்கம், சுகாதாரத்துறை, கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், சமூகநலத்துறை ஆகிய துறைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகியோர்களுக்கான பயிற்சியாளர் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், அவற்றிற்கான சட்டங்கள் குறித்தும் களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். திருச்சி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை தடுப்பதற்கு பல்வேறு துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மூலம் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், பெற்றோர் மற்றும் ஆசிரியர் கலந்தாலோசனை கூட்டங்களின்போது பெற்றோர்களுக்கும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தை திருமண தடுப்பு குறித்த இலவச சைல்டு லைன் எண் 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக சமூக நலத்துறையின் மூலம் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குழந்தைக்கு தலா 25,000 வீதம் 4 பயனாளிகளுக்கு ரூ.2,00,000 மதிப்பிலான வைப்பீட்டு பத்திரம் வழங்கப்பட்டது. மாவட்ட சமூகநல அலுவலர் தமீமுன்னிசா உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: