ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் பாலத்தில் இருந்து ஏறி, இறங்கி செல்ல ஏணிப்படிகள் அமைப்பு

ஊத்துக்கோட்டை:  நிவர் புயல் காரணமாக ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஆந்திர மாநிலம் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு  மழை பெய்ததால்  ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி நிரம்பியது. இதையொட்டி, கடந்த 26ம் தேதி  தண்ணீர்  திறக்கப்பட்டது. இதனால், ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே உள்ள ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே ₹ 27 கோடியில் புதிய பாலம் கட்டப்படுவதால், போக்குவரத்திற்காக  தற்காலிகமாக மாற்று தரைப்பாலம் அமைக்கப்பட்டது. அந்த பாலம் சேதமடைந்து இரண்டு இடங்களில் துண்டாக உடைந்தது. இதனால் ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம் போன்ற பல கிராமங்களை சேர்ந்த அரசு, தனியார் கம்பெனி  ஊழியர்களும் பொது மக்களும்  ஊத்துக்கோட்டை வந்து  இந்த தரைப்பாலத்தை கடந்து  செல்ல அவதிபட்டனர்.கடந்த 6 நாட்களாக  பெரியபாளையம் வழியாக 40 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு சென்றனர்.

மேலும், ஊத்துக்கோட்டையை சுற்றியுள்ள 50 கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். இதனால், வேலைக்கு செல்லும் போலீசார் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், தனியார் கம்பெனி ஊழியர்கள், கூலி  வேலைக்கு செல்பவர்கள் என பல தரப்பட்டவர்கள், புதிய பாலத்தின் ஒரு முனையில் இருந்து மற்றொரு பகுதிக்கு நடந்து வந்து அவர்கள் ஆபத்தான முறையில் பாலம் கட்ட அமைக்கப்பட்ட இரும்பு சாரத்தின் வழியாக இறங்கி வேலைக்கு  சென்றனர். இதுபோல், ஆபத்தான முறையில் இறங்கி வரும் மக்களை போலீசார் அனுமதிக்கவில்லை.

இதனால், போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாலத்தின் மீது நடந்து செல்ல பொதுப்பணித்துறையோ, நெடுஞ்சாலை துறையோ கண்டுகொள்ளாத நிலையில்  கடந்த 30ம் தேதி தினகரன் நாளிதழில் படம் வெளியானது.

இதையறிந்து, ஊத்துக்கோட்டை காவல்துறையின்  சார்பில் கிராம மக்கள் நடந்து செல்ல ஏதுவாக இரும்பால் சாய்தள படிகள் அமைத்து தரப்பட்டது. இதை ஏற்பாடு செய்ய உத்தரவிட்ட எஸ்பி அரவிந்தன் மற்றும்  ஊத்துக்கோட்டை டிஎஸ்பி  சாரதி, இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் எஸ்ஐ ராக்கிகுமாரி ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர்.  

Related Stories: