குடும்ப பிரச்னையில் முன்விரோதம் பூக்கடைக்காரர் குத்திக்கொலை மருமகளின் சகோதரருக்கு வலை

போடி, டிச. 2: போடி மதுரை வீரன் தெருவைச் சேர்ந்த முருகன் மகள் லிங்கேஸ்வரி (27). இவருக்கும், போடி வெங்கடாஜலபதி கோயில் தெருவை சேர்ந்த மகாராஜன் மகன் பாலமுருகனுக்கும் 2017ல் திருமணம் நடந்தது. அப்போது 35 பவுன் நகை, சீர்வரிசை வழங்கினர். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், பாலமுருகன் கேரள மாநிலம், மூணாறில் பூக்கடை நடத்தி வந்தார். கணவன், மனைவி கருத்துவேறுபாட்டால் கடந்த ஜூலை 2ல் லிங்கேஸ்வரி வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதனால், முருகன் குடும்பத்திற்கும், மகாராஜன் குடும்பத்திற்கும் முன்விரோதம் ஏற்பட்டது. லிங்கேஸ்வரி குடும்பத்தினர் திருமணத்தின்போது போட்ட 35 பவுன் நகை சீர்வரிசைகளை திருப்பி கேட்டனர். ஆனால், மகாராஜன் குடும்பத்தினர் நகை, சீர்வரிசையை தரமறுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், போடி நகர் காவல்நிலையம் எதிர்புரம் உள்ள பூக்கடையில் மகாராஜன் நேற்று இரவு பூக்கட்டிக் கொண்டிருந்தார். அங்கு சென்ற முருகன் மகன் சுந்தர், எனது அக்காள் தூக்கிட்டு தற்கொலை செய்தது முதல் குடும்பத்தில் அமைதி இல்லாமல் இருக்கிறோம். எனவே, 35 பவுன் நகை, சீர்வரிசையை திரும்ப கொடுங்கள் என கேட்டார். இதற்கு மகாராஜன் தரமுடியாது என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து இருவருக்கும் தகராறு உருவாகி அடிதடியாக மாறியது. அப்போது ஆத்திரம் அடைந்த சுந்தர் கத்தியால், மகாராஜனை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயம் அடைந்த மகாராஜனை மீட்டு, தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாராஜன் இறந்தார். இது குறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய சுந்தரை தேடி வருகின்றனர்.

Related Stories: