தமிழக அரசைக் கண்டித்து தொடர் வேலை நிறுத்த போராட்டம் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் அறிவிப்பு

காரியாபட்டி, நவ. 30: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் விருதுநகர், தேனி, மதுரை மண்டல கூட்டம், காரியாபட்டியில் நேற்று முன்தினம் நடந்தது. விருதுநகர் மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குணசேகரன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் சூரியமூர்த்தி, மதுரை மாவட்ட தலைவர் தவமணி, தேனி மாவட்ட செயலாளர் முத்துமணி முன்னிலை வகித்தனர். மாநில சங்க ஆலோசகர் மகேந்திரன், பொருளாளர் மாரிமுத்து ஆகியோர் 14 அம்ச கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அப்போது, ‘வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், வருவாய் கிராம ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ், கிராம உதவியாளர்களுக்கு விஏஓ பதவி உயர்வு. 2003க்கு முன் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய முறையில் பென்ஷன், பதவி உயர்வில் ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களை ஓட்டுநர் பட்டியலில் சேர்த்தல், 1995 ஜூன் மாதத்திற்கு முன்பு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு, பணிபுரிந்த காலத்தை கணக்கில் சேர்த்து, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி பென்ஷன் அரசாணை வழங்குதல் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை நிறைவேற வலியுறுத்தி டிச.30ம் தேதி அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில், விடுப்பு எடுத்து போரட்டம் நடத்துவோம், கோரிக்கைகளையும் நிறைவேற்றாவிட்டால் தமிழக அரசைக் கண்டித்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என தெரிவித்தனர்.

Related Stories: