கலெக்டர் தகவல் பழமையான கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும்

திருத்துறைப்பூண்டி, நவ.27: பழமையான கட்டிடங்களை இடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் தெரிவித்ததாவது: திருவாரூர் மாவட்டத்திலுள்ள பழுதடைந்த கட்டிடங்களை இடிப்பது குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று முந்தைய மாவட்ட கலெக்டர் ஆனந்த் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த செய்திகுறிப்பில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீண்டகாலமாக பயன்படுத்தபடமாலும், பழுதடைந்த நிலையிலும் உள்ள தனியார் கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலமாகவோ அல்லது எழுத்து பூர்வமாகவோ புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

அவ்வாறு புகார்களை தெரிவிக்கும்போது தொடர்புடைய கட்டிடம், இருக்கும் வட்டம், ஊராட்சி, தெரு மற்றும் கட்டிட உரிமையாளர் போன்ற விபரங்களை தெரிவிக்க வேண்டுமென அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த தகவல் கடந்த 13-8-2020 அன்று அனைத்து நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளது. இத்தகைய தகவலின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து மாவட்ட கலெக்டருக்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளது. குறிப்பிட்ட சில புகார்களின் மீது புகாரில் தெரிவித்துள்ள சம்மந்தப்பட்ட பழுதடைந்த கட்டிடங்களை உரிய முறையில் ஆய்வு செய்து கனமழை மற்றும் புயல் எச்சரிக்கையில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான முறையில் கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பல்வேறு தரப்பினர் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, கனமழை, புயல், வெள்ள எச்சரிக்கை என்பது இன்னும் முடிந்து விடவில்லை. டிசம்பர் மாதம் வரை தொடரும் நிலை உள்ளதால் அரசும் மாவட்ட நிர்வாகமும் பழமை வாய்ந்த கட்டிடங்களை உடனே இடித்து பாதிப்புகளை தவிர்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: