கவுசிகா ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் ஆதித்தமிழர் பேரவை மனு

விருதுநகர், நவ.24: கவுசிகா ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆதித்தமிழர் பேரவை மாநில அமைப்புச் செயலாளர் வீரபெருமாள் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தார். மனுவில், விருதுநகரில் கௌசிகா ஆறு நகர் பகுதி அருகே சென்று குல்லூர் சந்தையில் உள்ள அணையில் முடிவடைகிறது. விருதுநகர் நகராட்சி குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றும் கழிவுநீர் மற்றும் மலம் கலந்த கழிவு நீர் நேரடியாக கவுசிகா ஆற்றில் கலக்கிறது. நகராட்சி நிர்வாகத்தில் அமைக்கப்பட்ட கால்வாய்கள் வழியாக ஆற்றில் வந்து கலக்கப்படுகிறது.

விருதுநகர் நகராட்சி கழிவுநீர் கால்வாய்கள் மதுரை பை-பாஸ் சாலை துவங்கி பர்மா காலனி, சிவஞானபுரம், பாத்திமாநகர், ஆற்றுப்பாலம் வரை கழிவுநீர் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி பகுதிகளில் மலக்குழி அமைக்காத வீடுகளிலிருந்து நேரடியாக கால்வாய்களில் கழிவுநீர் கலக்கிறது. இந்த கழிவுநீர் குல்லூர்சந்தை நீர்தேக்க அணையில் கலப்பதால் தேக்கப்படும் நீர் பயனற்ற  வகையில் உள்ளது. எனவே  நகராட்சி பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: