கண்ணன்கோட்டை நீர்தேக்கம் திறப்பு: கலெக்டர் சிறப்பு பூஜை

கும்மிடிப்பூண்டி: கண்ணன்கோட்டை ஈசா ராஜன் ஏரி, தேர்வாய் கண்டிகை பெரிய ஏரிகளை இணைத்து கண்ணன்கோட்டை பகுதியை சேர்ந்த சுமார் 850 ஏக்கர் நிலம், தேர்வாய் கண்டிகையை சேர்ந் சுமார் 200 ஏக்கர் நிலம், கரடிபுத்தூரை சேர்ந்த சுமார் 100 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 1485.16 ஏக்கர் நிலத்தில் ₹380 கோடி மதிப்பீட்டில் நீர்தேக்கம் அமைக்கப்பட்டது. 2012ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி அன்றைய முதல்வர் ஜெயலலிதா  சென்னைக்கு 1 டிஎம்சி தண்ணீரை கண்ணன்கோட்டை - தேர்வாய் நீர்தேக்கத்தில் இருந்து கொண்டு செல்லும் நோக்கில் இந்த திட்டத்திற்கான அரசாணையை வெளியிட்டார். இதனை தொடர்ந்து 2013ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இந்த நீர்தேக்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

அதனை தொடர்ந்து 800.65 பட்டா நிலம், 54.59 வனத்துறைக்கு சொந்தமான நிலம் என 1485.16 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியது. இதில் கண்ணன்கோட்டை பகுதியில் இருந்து 600 ஏக்கர் பட்டா விவசாய நிலத்தை கையகப்படுத்த அப்பகுதி விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தியதோடு வழக்கும் தொடர்ந்தனர். இதனால் மொத்த நிலங்களை கையகப்படுத்தவே 5 பொதுப்பணித்துறைக்கு ஆண்டுகள் ஆனது. இந்நிலையில், 2019ம் ஆண்டு வரை மந்தமாக நடைபெற்ற நீர்தேக்க பணிகள் அதன் பிறகு  விறுவிறுப்படைந்து தற்போது நிறைவடைந்தது. கண்ணன் கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்தேக்கம் திறப்பு விழாவை ஒட்டி விழாக்கோலம் பூண்டது.

நீர்தேக்கத்தை சுற்றி வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்திருந்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இந்த நீர் தேக்கத்தை காணொலி மூலம் திறந்தவுடன், கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர் தேக்கத்தில் உள்ள நீரேற்று நிலையத்தில் கலெக்டர் பொன்னையா தலைமையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, கண்ணன்கோட்டை நீர்தேக்க திட்ட பொறியாளர் தில்லைக்கரசி  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: