பனியன் தொழிலாளர்களுக்கு போனஸ்:13ம் தேதி முதல் விடுமுறை

திருப்பூர், நவ.11:  திருப்பூர் பனியன் தொழிலாளருக்கு, போனஸ் பட்டுவாடா துவங்கி நடந்து வருகிறது. வரும் 13ம் தேதி முதல் தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பகுதியில் 1,500க்கும் அதிகமான ஏற்றுமதி உற்பத்தி நிறுவனங்கள், 2 ஆயிரத்துக்கும் அதிகமான உள்நாட்டு விற்பனை பனியன் உற்பத்தி நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான சிறு பனியன் உற்பத்தி நிறுவனங்கள் என ஐந்தாயிரத்திற்கும் அதிகமான பனியன் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இங்கு பெண்கள் உட்பட 5 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ‘பீஸ் ரேட்’ முறையில் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் போனஸ் எதிர்பார்க்க முடியாது. சில பகுதிகளில் மட்டும் குறைந்த அளவு வழங்கப்படுகிறது. ஷிப்ட் அடிப்படையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு மட்டும் சதவீத போனஸ் வழங்கப்படுகிறது.

கடந்தாண்டு அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரை போனஸ் கிடைத்தது. நடப்பாண்டில், கடந்தாண்டை காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. அதன்படி, 20 முதல் 30 சதவீதம் வரையிலும், சில நிறுவனங்களில் மட்டும் 35  சதவீதம் வரையிலும் போனஸ் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. வரும் 14ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து ஆடை உற்பத்திக்கு அதிகளவு ஆர்டர்கள் கிடைத்துள்ளன. கொரோனா பரவல் துவங்கியபோது, லட்சக்கணக்கான தொழிலாளர், சொந்த ஊர் சென்றுவிட்டனர். தீபாவளி நெருங்கும் நிலையில், குறைந்தபட்ச தொழிலாளரை கொண்டு, ஆடை தயாரித்து அனுப்பப்படுகிறது. போனஸ் வழங்கியபின், தொழிலாளர் விடுப்பு எடுப்பது வழக்கமாக உள்ளது. எனவே, ஆர்டர் அதிகமுள்ள நிறுவனங்களில் நாளை (12ம் தேதி) மாலை போனஸ் பட்டுவாடா செய்யப்படுகிறது. வரும் 13ம் தேதி முதல் 23ம் தேதி வரை, அனைத்து பின்னலாடை தொழிலாளர்களுக்கும் பண்டிகை விடுமுறை அளிக்கப்படுகிறது.

Related Stories: