போலீசார் போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி ஒருவரை பிடித்து தர்மஅடி: தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு

கும்பகோணம், நவ. 6: கும்பகோணம் அருகே போலீசார் போல் நடித்து மூதாட்டியிடம் நகைகளை பறிக்க 3 பேர் முயன்றனர். இதில் ஒருவனை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கும்பகோணம் இபி காலனியை சேர்ந்தவர் கலியமூர்த்தி மனைவி அமிர்தவள்ளி (60). இவர் நேற்று பொருட்கள் வாங்க வெளியில் சென்று விட்டு கும்பகோணம் பேட்டை வடக்குத்தெரு வழியாக தனது வீட்டுக்கு சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வடமாநிலத்தவர் போல் தோற்றமுடைய 3 மர்மநபர்கள் வந்தனர். பின்னர் அமிர்தவள்ளி அருகே சென்று தாங்கள் போலீஸ் என்றும், முககவசம் அணிந்து கொண்டு பாதுகாப்பாக செல்ல வேண்டுமென 3 பேரும் கூறியுள்ளனர்.

பின்னர் அமிர்தவள்ளியிடம் தாங்கள் அணிந்தள்ள தங்க செயின், வளையலை பத்திரமாக கழற்றி வைத்து கொள்ளுங்கள் என்றனர். மேலும் நகைகளை கழற்றி மடித்து வைத்து கொள்ள பேப்பரை கொடுத்தனர்.  இதையடுத்து தான் அணிந்திருந்த 14 பவுன் நகைகளை கழற்றினார். அப்போது பேப்பரில் மடித்து தருவதாக அந்த நகைகளை 3 பேரும் வாங்கினர். பின்னர் அடுத்த சில வினாடிகளில் அங்கிருந்து நகைகளுடன் 3 மர்மநபர்கள் தப்பியோட முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அமிர்தவள்ளி, 3 பேரில் ஒருவனின் சட்டையை பிடித்து அவனிடமிருந்த 14 பவுன் நகையை மீட்டதோடு கூச்சலிட்டார். இதை கேட்டு பொதுமக்கள் வருவதற்குள் மற்ற 2 பேரும் பைக்கில் அங்கிருந்து தப்பியோடினார். ஒருவர் மட்டுமே சிக்கினார். பின்னர் சிக்கிய 45 வயது மதிக்கத்தக்க நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து கும்பகோணம் கிழக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் அந்த நபர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், நகை திருட்டில் ஈடுபட்ட நபர்களில் ஒருவன் சிக்கியுள்ளான். அவன் வடமாநிலத்தை சேர்ந்தவனாக இருக்கலாம். போலீஸ் விசாரணையில் முழு விபரம் தெரியவரும். அவனுக்கு உடலில் சில இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவன் இயல்பு நிலைக்கு வந்த பிறகு விசாரணை தொடரும். மேலும் 2 பேரை தேடி வருகிறோம் என்றனர்.

Related Stories: